சென்னை : முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக் அவர்களின் புகழ் ஓங்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன்படி, தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மணிமண்டபத்தையும் சுற்றி பார்த்தார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில், “முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி தேனி – மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு தேனி லோயர்கேம்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில், அவருடைய திருவுருவச்சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும் இங்குள்ள மக்களின் நலனுக்காக தன் சொத்துகளை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக் அவர்களின் புகழ் ஓங்கட்டும்,”எனப் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கம்பத்தில் நடைபெற்ற விழாவில் திமுக மூத்த நிர்வாகிகள் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.