டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மீண்டும் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. இன்று நடந்த முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் ஆய்வுப் பணியை 12 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒன்றிய நதிநீர் ஆணைய தலைமை அலுவலகத்தில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு கூட்டம் நடந்தது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தலைவர் ராகேஷ் காஷ்யப் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு பற்றிய ஆய்வை 2026-ம் ஆண்டு நடத்த வேண்டும் என தமிழ்நாடு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு சட்டப்படி ஆய்வை 2026-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது.
ஏற்கனவே 2011-ல் முல்லை பெரியாறு அணை ஆய்வு செய்யப்பட்டு பலமாக இருப்பதாக ஆய்வுக்குழு சான்றளித்தது. அணை உறுதியாக உள்ளது என சான்று அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராகவே கேரள அரசு கருத்து தெரிவித்து வருகிறது. அணை கட்டமைப்பு பலம், நிலநடுக்கத்தை தாங்கும் திறன், வெள்ளத்தை தாங்கும் திறன் குறித்து ஆய்வு செய்யப்படும்.