கேரளா: முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக அளித்த ஆய்வறிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இந்திய நிலஅளவைத் துறை ஆய்வறிக்கை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் மறுப்பு தெரிவித்துள்ளது. கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை என்று இந்திய நிலஅளவைத் துறை ஆய்வறிக்கை தெரிவித்து இருக்கிறது. நீர்ப்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளதாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1924-ம் ஆண்டு நிலஅளவைத் துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள கட்டிவரும் மிகப்பெரிய வாகனம் நிறுத்தும் இடத்தின் மூலப்பகுதி, தரைதளம் எங்கு உள்ளது என்பதை குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெகா வாகன நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.