தேனி: முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் 3 நபர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணை பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையை உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் அதனை தொடர்ந்து ஒன்றிய நீர்வள ஆணையத்தின் பொறியாளர் தலைமையில் 3 நபர் கண்காணிப்பு குழு அணையினை கண்காணித்து அணையின் பராமரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் பொறியாளரும், அணைகள் பாதுகாப்பு குழு தலைவருமான ராஜேஷ் காசிப் தலைமையில், தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர், கேரள கூடுதல் செயலாளர் ஆகிய 3 நபர் குழு தற்போது முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்கின்றனர். காலை 10 மணி அளவில் தேக்கடி படகுத்துறையில் இருந்து படகு மூலம் இந்த குழுவினர் அணைபகுதி சென்று பிற்பகல் 12 மணியளவில் மெயின் அணை, பேபி அணை, மண் அணை, உபரி நீர் வெளியேறக்கூடிய மதகுகள் மற்றும் கேலறி பகுதிகளை ஆய்வு செய்தனர்
இந்த ஆய்வினை தொடர்ந்து மாலையில் குமிளி பகுதியில் உள்ள துணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில் இரு தரப்பு அதிகாரிகளின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.