மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி இன்று நடந்தது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தங்கள் பாவத்தை போக்கி கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி துலா கட்டத்தில் நேற்று கடைமுக தீர்த்தவாரி கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கடைமுக தீர்த்தவாரியில் நீராட விரும்பிய உடல் அவயங்கள் முடங்கி பாதிக்கப்பட்ட ஒரு பக்தரால் மயிலாடுதுறை வர முடியவில்லை. எனவே அந்த பக்தனுக்காக மனம் இறங்கிய இறைவன், காவிரியில் ஐப்பசியில் நீராடிய பலனை ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள் அளித்தார்.
இது முடவன் முழுக்கு என்ற நிகழ்வாக ஆண்டுதோறும் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கார்த்திகை 1ம் தேதி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மயூரநாதர் கோயில் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் அஸ்திர தேவரை மட்டும் காவிரி கரைக்கு எடுத்து சென்றனர். அங்கு அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியப்பொடிகளால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.