போபால்: மபி முதல்வர் மோகன்யாதவ் அங்குள்ள ரத்லம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கான்வாயில் இடம் பெற்று இருந்த 19 வாகனங்கள் அடுத்தடுத்து பழுதடைந்து நடுரோட்டில் நின்றன. இதனால் முதல்வர் கான்வாய் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் இந்தூரில் இருந்து ரத்லம் மாவட்டத்திற்கு வியாழக்கிழமை பகலில் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பங்க்கில் டீசல் போடப்பட்டது. அதில் கலப்படம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து டீசல் வெளியேற்றப்பட்டு, பின்னர் புதிய பாதுகாப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு கான்வாய் தொடரப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உள்ளுர் பெட்ரோல் பங்க்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் அடைந்து, அந்த டீசலை உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஊழியர்கள் ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். அதில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கலந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெட்ரோல் பம்ப் சீல் வைக்கப்பட்டது. அந்த பம்ப்பில் இருந்த 5995 லிட்டர் பெட்ரோல் மற்றும் 10,657 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. பம்பின் உரிமையாளர் மற்றும் அதன் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.