சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணையை தொடங்க ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக புகார் உள்ளதே, அதன் தற்போதைய நிலை என்ன என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேட்டார்.
அதற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதல் பெற தமிழக அரசு தரப்பில் கடந்த 2023ம் ஆண்டு அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் லஞ்ச ஒழிப்புத் துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு தொடர்பான விசாரணையை தொடங்கும் என்று தெரிவித்தார்.