Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் விமானம் மாஸ்கோவில் தரையிறங்குவதில் தாமதம்: இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி

மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் மாஸ்கோவில் தாமதமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதல் ஆகியவை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக, அனைத்துக்கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் 33 நாடுகளுக்கு சென்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்து விளக்க உள்ளன. அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு நேற்று டெல்லியில் இருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்ய அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். ஆனால் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று பயணம் செய்த கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தும் அடுத்த சில நிமிடங்களில், இந்திய எம்பிக்கள் சென்ற விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்று பத்திரமாக ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாள்களாக தீவிரமான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடும் நடத்தி வருகின்றது.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு மாகாணங்களைக் குறிவைத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றிரவும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் 10 மாகாணங்களை குறிவைத்து உக்ரைன் அனுப்பிய 105 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோ உள்பட ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களில் விமான சேவை நேற்றிரவு 3 மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.