புதுடெல்லி: ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ராகுல்காந்தியும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கார்கே கூறியதாவது: இது மகிழ்ச்சியின் நாள், ஜனநாயகம் வென்றது, அரசியலமைப்பு வென்றது, சத்யமேவ ஜெயதே. அரசியலமைப்புச் சட்டம் உயிருடன் உள்ளது.
நீதியைப் பெற முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது சாமானிய மக்களின் வெற்றி, இது ராகுல் காந்தியின் வெற்றி மட்டுமல்ல, இது நாட்டு மக்கள் அனைவரின் வெற்றி, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கொள்கைகளின் வெற்றி. ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் நடந்தது. இப்போது அவர் எத்தனை மணி நேரத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.