சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் எனவும் ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்ற பதிவாளர் தரப்பிடம் கோரினார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்களையும், இந்த வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவி காலம் குறித்த தகவல்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும். எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அதேபோல, பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின் மூலமாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள அந்த வழக்குகளின் விவரங்களையும் அறிக்கையாக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2025 ஜனவரி 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.