
சிவகங்கை: தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக எச்.ராஜா தெரிவித்து உள்ளார். சிவகங்கையில் நேற்று முன்தினம் நடந்த பாஜ நிறுவன தின ஆலோசனை கூட்டத்தில் பேசிய எச்.ராஜா பேசுகையில், ‘தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். அதே நேரம் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜதான் போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டுமென பேசி உள்ளார். சிவகங்கையில் பாஜ தான் போட்டியிடும் என எச்.ராஜா பேசியுள்ளது அதிமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை நியமிக்க பாஜ மேலிடம் முடிவு செய்து உள்ளது. அதன்படி, முதல் கூட்டத்தையும் எல்.முருகன் நடத்தி, 9 தொகுதிகளில் பாஜ வேலை செய்து வருகிறது என கூறினார்.
இதற்கு அதிமுக சார்பில் ஜெயக்குமார் பதிலடி கொடுக்கும் வகையில், கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி என்று அதிமுகதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். தற்போது சிவங்கையில் பாஜ போட்டியிடும் என்று எச்.ராஜா பேசி உள்ளது, அதிமுக-பாஜ கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இம்முறை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், கட்சி மேலிடம் இவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியிலும் எந்த எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. இவருக்கு பின் பாஜவில் பொறுப்புக்கு வந்த பலர் முக்கிய பதவிகளை பெற்றுள்ள நிலையில், பாஜ தலைமை இவரை ஓரங்கட்டியே வருகிறது. இதனால்தான் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்குவதாக எச்.ராஜா அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.