சென்னை: மாநிலங்களவை பதவி தேமுதிகவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது ராஜ்யசபா சீட் குறித்து அதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார். ஆனால், தாங்கள் அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். இதனால் அதிமுக, தேமுதிக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டது.
இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடத்திற்கு திமுக சார்பில் 4 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 2 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதிமுக மாநிலங்களவை சீட் ஒதுக்குமா? என்று பிரேமலதா விஜயகாந்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பிரேமலதா, பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஜனவரியில் கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று கூறினார்.