உதகை: மழை பாதிப்பு, பராமரிப்பு பணி என 25 நாட்களாக நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் வரும் 31ம் தேதி வரை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்கும், உதகையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை மற்றும் தண்டவாளத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (26.08.2024) முதல் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைரயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அத்துடன் மலைரயில் பாதையில் உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே வருகிற 31-ம் தேதி வரை மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.