சென்னை: வாகன புழக்கம் அதிகமுள்ள சென்னையில் சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. நடைபாதைகள் அமைக்கப்பட்ட பிறகு வாகன இடையூறு இல்லாமல் சிரமமின்றி பாதசாரிகள் நடந்து செல்ல முடிகிறது. ஆனால், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் பாதசாரிகளுக்கு இது சாத்தியமாவதில்லை. தினமும் லட்சக்கணக்கான பாதசாரிகள் வாகன இடையூறு பிரச்னையை சந்திக்கின்றனர்.
புரசைவாக்கம், தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை உள்ளிட்ட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நடைபாதைகளை வாகனங்களும், சாலையோர வியாபாரிகளும் தான் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். இதுபோன்ற நடைபாதை ஆக்கிரமிப்புகளால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சில நேரங்களில் வாகன விபத்துகளில் சிக்குவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்வது வேதனை அளிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இதனால் நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தினால் இதுபோன்ற நடைபாதை ஆக்கிரமிப்பு பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், சுமார் 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல்வேறுவிதமான வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 20,000க்கும் அதிகமானோர் தள்ளுவண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்களில் மலிவான விலையில் தரமான உணவு கிடைப்பதால் பல கடைகளை பேச்சுலர்கள் முதல் பேமிலி வரை முற்றுகையிடுகின்றனர்.
இதேபோன்று பல்வேறு வணிகங்களும் இந்த சாலையோர கடைகள் மூலம் நடப்பதால் பல இடங்களில் மக்கள் அதிகம் கூடுகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் மிக அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இவ்வாறு சாலையோர கடைகளில் கூட்டம் கூடுவதால் அந்த பகுதிகளில் கூடும் மக்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் அந்த சாலைகளை கடக்க மிகவும் சிரமமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோர கடைகள் அமைப்பதை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சென்னை மாநகராட்சி முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் நகர விற்பனைக் குழு மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் வியாபாரம் செய்ய முடியும்.
இந்நிலையில் சென்னையின் சில முக்கிய சாலைகள் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈவெரா பெரியார் சாலை, புதிய ஆவடி சாலை, திருமங்கலம் சாலை, கொளத்தூர் பிரதான சாலை, பிரகாசம் சாலை, மூலச்சத்திரம் பிரதான சாலை, லேபர் காலனி, ஜோன்ஸ் சாலை உள்ளிட்டவை சாலையோரம் வியாபாரம்
செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 776 பகுதிகள் விற்பனை செய்யக்கூடிய மண்டலங்களாகவும், 491 பகுதிகள் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்களாகவும் அறிவிக்க சென்னை மாநகராட்சியின் நகர விற்பனை குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனை காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்தவும் மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்
ளது. அதன் தலைவராக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளார். மாநகரம் முழுவதும் 35,500க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்றிய, மாநில அரசுகளின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் மூலம் பயன்பெறவும் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, தடை விதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, மாநகரில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையர் குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த ஆலோசனையின் போது, சென்னையில் எத்தனை இடங்களில் சாலையோர வியாபாரத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளது, தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிகள் எவை, எதற்காக அங்கு சாலையோர வியாபாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் ஆணையர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, ‘விரைவில் மாநகரில் மாதிரி சாலையோர வியாபார பகுதிகளை அமைக்க வேண்டும். படிப்படியாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்க தேவையான இடங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தலா 2 இடங்களை தேர்வு செய்து, சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதியாக வரையறுத்து, அங்கு, மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்க வேண்டும்” என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னையில் 6 இடங்களில் மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், இதன் ஒருபகுதியாக வடசென்னையில் முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்ட, முதல் மாதிரி சாலையோர வியாபார விற்பனை மண்டலம் அமைய உள்ளது. இதற்காக எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில் அமைந்துள்ள கேப்டன் காட்டன் கால்வாய் அருகே உள்ள இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர்.
இந்த இடம் சுமார் 270 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் 150 உணவு கடைகள் மற்றும் பூ விற்பனை, பொருட்கள் விற்பனை கடைகள் அமைய உள்ளது. இதற்கான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து பார்வையிட்டனர். இது தொடர்பான அறிக்கை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் அப்பகுதியில் கடைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: சென்னை மாநகராட்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் முக்கிய சாலைகளில் பல இடங்களில் சாலையோர வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. இதனால் நடைபாதைகளை பயன்படுத்துபவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் சில இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி, அதேநேரம் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சென்னை மாநகரில் மாதிரி சாலையோர வியாபார பகுதிகளை அமைக்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். முதல்கட்டமாக எம்.கே.பி.நகர், வடக்கு அவென்யூ சாலையில் அமைந்துள்ள கேப்டன் காட்டன் கால்வாய் அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி அகலமான நடைபாதைகள் கொண்ட முக்கிய சாலை என்பதால் இந்த பகுதியை, மாதிரி சாலையோர வியாபார விற்பனை மண்டலம் அமைக்க தேர்வு செய்துள்ளோம். தற்போது அங்கு பேருந்துகள் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். உணவு விற்பனை மண்டலம் அமைக்க இந்த சாலை பொருத்தமானது. 96 விற்பனையாளர்கள் அங்கு வர ஏற்கனவே தயாராக உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.