அருமனை: கடையால் அருகே மோதிரமலையில் யானைகள் கூட்டம் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குமரி மாவட்டம் கடையால் அருகே உள்ள மோதிரமலையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் தங்களது விளை நிலங்களில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதற்கிடையே வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் யானை கூட்டம் மோதிரமலை பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை மோதிரமலை கொழஞ்சிமடம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு அன்னாசி, வாழை, தென்னை மரங்களை நாசம் செய்துவிட்டு காட்டுக்குள் மறைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வனத்துறையினரிடம் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களை தாக்குவதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சத்துடன் கூறினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் யானைகள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மோதிரமலையில் யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.