ஜான்சி,ஜூலை 3; கணவர் குடும்பத்தின் 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க ஆசைப்பட்டு கணவர் இறந்தபின் அவரது 2 சகோதரர்களுடன் நெருக்கமாக இருந்து மாமியாரை கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் கும்ஹாரியா கிராமத்தை சேர்ந்தவர் சுஷிலா தேவி(54). இவர் கடந்த ஜூன் 24ஆம் தேதி மர்ம முறையில் மரணம் அடைந்தார். போலீஸ் விசாரணையில் வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள், நாட்டுத்துப்பாக்கி ஆகியவை காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்திய போது சுஷிலா தேவி வீட்டில் மாயமான நகைகளை விற்க முயன்ற அனில்வர்மா போலீசில் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தான் சுஷிலா தேவியை கொன்றதும், அதற்கு உடந்தையாக சுஷிலா தேவியின் இளைய மருமகன் பூஜா இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பூஜாவும், அனில் வர்மாவும் காதலர்கள் என்பதையும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் பூஜா மற்றும் அவரது சகோதரி கமலா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட சுஷிலா தேவிக்கு 3 மகன்கள். இவர்களுக்கு 6.5 ஏக்கர் நிலம் இருந்தது. பூஜாவின் கணவர் இறந்து விட்டாலும் அங்கேயே வசித்து வந்த பூஜாவுக்கு 6.5 ஏக்கர் நிலத்தின் மீது ஒரு கண் இருந்தது. இதையடுத்து தனது கணவரின் சகோதரரும், மைத்துனருமான கல்யாண் சிங்குடன் ெநருங்கிய தொடர்பில் இருந்தார். அவரும் மரணம் அடையவே, பூஜாவின் மாமனார் அஜய் சிங் மற்றும் மைத்துனர் சந்தோஷ் ஆகியோர் கும்ஹாரியாவில் உள்ள அவர்களின் மூதாதையர் வீட்டில் பூஜாவை தங்க வைத்தனர். அதன்பின் இன்னொரு மைத்துனர் சந்தோசுடன் பூஜா நெருக்கமானார்.
அந்த உறவில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததால், சந்தோஷ் மனைவி அவரை விட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதை தொடர்ந்து 6.5 ஏக்கர் நிலத்தில் பாதியை விற்றுவிட்டு, குவாலியர் சென்று விட பூஜா விரும்பினார். இதற்கு மாமனார் அஜய்சிங், மைத்துனர் சந்தோஷ் ஆகியோர் சம்மதித்தனர். ஆனால் சுஷிலா தேவி சம்மதிக்காததால் தனது காதலன் அனில்வர்மாவை வரவழைத்து அவரது உதவியுடன் சுஷிலா தேவியை கொன்றது தெரிய வந்தது. அனில்வர்மாவை போலீசார் சுட்டுப்பிடித்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவர் ஜான்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பூஜாவின் கணவர் மற்றும் மைத்துனர் கல்யாண்சிங் மரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.