திருமலை: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், லட்சுமபூரைச் சேர்ந்தவர்கள் நாடிமிண்டி ராஜாமணி- பாலராஜ் கவுட் தம்பதி. இவர்களது மூத்த மகள் ரம்யா(24). இவரை சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தௌல்தாபாத்தில் வசிக்கும் நவீன் கவுடு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களது மகள்கள் ருத்விகா மற்றும் ஷஸ்விகா. நவீன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கணவன், மனைவி இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையால் ரம்யா லட்சுமபூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார். அந்த நேரத்தில், நவீன், ரம்யா வசித்து வந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால் நவீன் மீது ராமயம்பேட்டை காவல் நிலையத்தில் ரம்யாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் நவீனை கைது செய்தனர். இந்த வழக்கில் நவீன் 3 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர் நவீன் விடுதலையான பிறகு, பெரியவர்கள் மூலம் பஞ்சாயத்து நடத்தி தம்பதியரை சமரசம் செய்தனர்.
பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். முன்னதாக நவீன் மீதான வழக்கு விசாரணையின் போது, அவரது பைக் மற்றும் செல்போன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நவீன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பைக் மற்றும் செல்போனை மீட்க மேடக் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, தம்பதி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ரம்யா நீதிமன்ற கட்டிடத்தின் 3வது மாடிக்கு சென்று தனது 2 குழந்தைகளை கீழே வீசிக்கொன்று தள்ளிவிட்டு, அவரும் குதித்தார். இதனை பார்த்த நவீனும் 3வது மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரம்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நவீன் மற்றும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.