மார்த்தாண்டம்: பஸ்சுக்காக காத்திருந்த 2 குழந்தைகளின் தாயை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்த பள்ளி நண்பர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ரதி (36) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கணவர், 2 பிள்ளைகள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ஜான் (36) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். ஜானும், ரதியும் பள்ளியில் ஒன்றாக படித்தபோது நட்புடன் பழகியுள்ளனர். இந்த பழக்கம் திருமணமான பிறகும் தொடர்ந்தது. இந்நிலையில் ரதி கடந்த சில நாட்களுக்கு முன், மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு சுமார் 9.30 மணியளவில் குழித்துறை வந்திறங்கினார். வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த ஜான், ரதியை வீட்டில் விடுவதாக அழைத்து சென்றுள்ளார். ஆனால் காரை தனது வீட்டுக்கு ஓட்டி சென்று ரதியின் கையை பிடித்து இழுத்து சென்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத ரதி அதிர்ச்சியில் உறைந்தார். தன் வீட்டில் யாரும் இல்லை என்று கூறி ரதியை பலாத்காரம் செய்தார். கதறி அழுத ரதியிடம் யாரிடமாவது கூறினால் உன்னையும், உனது பிள்ளைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். பின்னர் காரில் ஏற்றிஅவரது வீடு அருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து கணவரிடம் கூறி ரதி கதறி அழுதார். அவர் ஜானின் மனைவியிடம் சொல்லும்படி அவர் கூறவே, அங்கு சென்றுள்ளார். அப்போது ஜான், அவரது மனைவி, சகோதரி மற்றும் தாயார் இருந்தனர். அவர்களிடம் ரதி நடந்த விபரத்தை கூறி கதறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த ஜானின் சகோதரி செருப்பை எடுத்து ரதியை அடித்தார். இதையடுத்து ஜான் ரதியை சரமாரி தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்துள்ளார். இதில் காயமடைந்த ரதி குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவரது புகாரின்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.