Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மழலை தாயே... மகளும் நானே!

நன்றி குங்குமம் தோழி

இருவரும் மெல்ல

பயணங்கள் செல்லும்

நாளும் வந்ததோ...

நுரைகளைப் போல

குறைகளைத் தள்ளும்

விரலுமே உனதோ...

மழலை தாயே... மகளும் நானே

துணையும் நீயே, தோழியே..!’’

ஒரு மழலையின் தாய்மை மணம் கமழும் இந்த வரிகளுக்கு காட்சி வடிவம் கொடுத்து, ‘மழலை தாயே’ எனும் காணொளி பாடலை இயக்கியிருக்கிறார் சுந்தரி என பலராலும் அறியப்படும் கேப்ரெல்லா செல்லஸ். ஒரு தாயின் மழலை குணத்திற்கும் ஒரு குழந்தையின் தாய்மை குணத்திற்குமான பிணைப்பை இப்பாடலின் மூலம் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கேப்ரெல்லாவின் இந்த கலைப்படைப்பில் பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்கள் நம் மனதை நெகிழ வைக்கும்படி பாடியுள்ளார்.

கலையில் பேரார்வம் கொண்ட திறமையான கலைஞர்களுக்கு தன் படைப்பின் மூலம் முதல் வாய்ப்பினை அளித்திருக்கும் கேப்ரெல்லாவிடம் பேசிய போது... “கேபி’ஸ் தியேட்டர் ஃபேக்டரி, என்னைப் போன்று கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்காக நான் உருவாக்கிய முதல் மேடை என்றுதான் சொல்லுவேன். இதன் மூலம் கலை ஆர்வம் கொண்டவர்களுக்கு நான் கற்றுக்கொண்ட நடிப்புக் கலையை என் பாணியில் சொல்லிக் கொடுத்து வருகிறேன். என் திறமையை மேடையேற்ற எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

ஒரு கலைஞனின் முக்கிய இலக்கு தன் திறமையை மேடையேற்ற வேண்டும் என்பதுதான். அதற்கான முதல் படியை நான் காண்பித்து கொடுக்க விரும்பினேன். இதன்படி என்னிடம் பயின்ற மாணவர்களின் திறமையை வெளிக்காட்ட கலைப்படைப்புகளை உருவாக்க நினைத்தேன். ‘மழலை தாயே’ என்னுடைய கேபி’ஸ் தியேட்டர் ஃபேக்டரியின் முதல் படைப்பு. இதனை நான் இயக்கினாலும், மற்ற கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே நோக்கம். ‘மழலை தாயே’ பாடலுக்கு ஏற்றாற் போல கலைஞர்களை தேர்ந்தெடுத்து உருவாக்கப்படவில்லை. நான் பார்த்து வியந்த திறமையான கலைஞர்களுக்காகவே இப்பாடலினை உருவாக்கி இயக்கி இருக்கிறேன். இந்தப் படைப்பில் நடித்திருக்கும் பவித்ரா மற்றும் லிதன்யா இருவருமே திறமையான கலைஞர்கள்.

நான் தொடக்கத்தில் ஆன்லைன் வழி ஆக்டிங் வகுப்புகளை நடத்திய போது அதில் கலந்து கொண்ட மாணவர்களில் பவித்ராவும் ஒருவர். வகுப்பின் போது எல்லோரும் வீடியோவை ஆன் செய்திருப்பார்கள். அதன் மூலம் அவர்களின் பெர்ஃபார்மென்ஸை பார்க்க முடியும். ஆனால், பவித்ரா மட்டும் வீடியோவை ஆன் செய்ய மாட்டார். நான் பலமுறை கேட்ட பிறகு அதற்கான காரணத்தை சொன்னார். பவித்ரா ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீடியோ ஆன் செய்ய தயங்கினார்.

கலை மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு அவருக்கு ஊக்கம் அளித்தேன். அடுத்தடுத்த வகுப்புகளில் நான் ஆச்சர்யப்படும் விதமாக அவரின் திறமையை வெளிப்படுத்தினார். லிதன்யா சுந்தரி தொடரில் என்னுடன் நடித்த குழந்தை. நான் எப்போதும் ரசிக்கும் குழந்தை நட்சத்திரம் அவள். படப்பிடிப்புகளின் போது வசனம் சொல்வதில் ஏதேனும் வார்த்தைகள் விட்டுப்போனால் கூட அந்த வார்த்தைக்கு இணையான வேறு வார்த்தையை நிரப்பி அந்த வசனத்தை அழகாக பேசிவிடுவாள். அந்தளவிற்கு அவளுக்கு புரிதலும் கலை மீதான பற்றும் உள்ளது. என் மனம் கவர்ந்த இந்த இருவரின் திறமையையும் ஒரே திரையில் காட்சிப்படுத்த நினைத்தேன்” என்றவர், காணொளி பாடல் உருவான விதத்தை பகிர்ந்தார்.

“லிதன்யாவும் நானும் சீரியலில் பயணித்த போது எங்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பு ஏற்பட்டது. ஒரு தாய்-மகளின் பாசப்பிணைப்பு இருப்பதை உணர்வேன். அதையே என்னுடைய பாடலின் மையக்கருவாக தேர்ந்தெடுத்தேன். லிதன்யா ஒரு சிறு குழந்தை என்றால், பவித்ரா வளர்ந்த குழந்தை என்றே சொல்லலாம். இருவருக்கும் விரைவில் பிணைப்பு ஏற்பட்டது. பாடலில் அழும் காட்சியில் கூட பவித்ரா கிளிசரின் இல்லாமல் நடித்தார். திரையில் பார்த்த போது மிகவும் இயல்பான யதார்த்தமான காட்சிகளாக அமைந்தன. ஒரு குழந்தை வளர்ந்த பின் தன் தாயை, தாய்மை உணர்வோடு பார்த்துக் கொள்வது நாம் காணக்கூடியது.

‘மழலை தாயே’ ஒரு பெண்ணின் தாய்மை மற்றும் தாயன்பின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் படைப்பு. எதிர்வீட்டில் வசிக்கும் ஒரு குழந்தையை சந்திக்கும் போதெல்லாம் தனக்கும் இப்படியொரு குழந்தை இல்லையே என்கிற ஏக்கத்தோடும் கனவோடும் வாழ்கிற பெண். அந்தக் குழந்தையை தன் குழந்தையாக நினைத்து அவளுடன் அன்பை பரிமாறிக்கொள்கிறாள். இருவரும் ஆழமான அன்பினில் திளைத்துப் போகிறார்கள். ஏதோ ஒரு தருணத்தில் அது அவளுடைய சொந்தக் குழந்தை இல்லை எனும் யதார்த்தத்திற்கு வரும்போது அந்த தாய்மைவெறும் கனவாகவே போகிறது. அந்தக் குழந்தை மீதான அன்பு குறைவதில்லை.

சில சமயங்களில் நமக்குப் பிடித்தமானவர்கள் நம்முடனே இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை அவர்களின் சிறு புன்னகையே நமக்கு போதுமானதாக இருக்கும். இதே போல தாய்மையுள்ளம் கொண்ட அந்தக் குழந்தையின் சிரிப்பும் முத்தமும் ஏக்கம் கொண்ட அந்தப் பெண்ணின் மனதை நிறைவடைய செய்கிறது. போதுமான மன நிறைவுடனும் கனவுடனும் அந்தப் பெண் தன்னம்பிக்கையோடு தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறாள். பவித்ரா மற்றும் லிதன்யா இருவரின் கலைநயத்தினால் இது அழகான காட்சிகளை கொண்ட ஒரு படைப்பாக மாறியுள்ளது” என்று நெகிழ்ந்தவர், பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி குறித்து மனம் திறந்தார்.

“இந்தப் படைப்பு உருவாக காரணமாக இருந்த என்னுடன் இணைந்து பங்காற்றிய ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் தயாரித்து இயக்கியிருந்தாலும் அனைவரின் திறமையும் உழைப்பும் ஒன்றுபட்டதால்தான் இந்தப் படைப்பு சாத்தியமானது. ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் பாடலிலும் ‘நுரைகளைப் போல குறைகளைத் தள்ளலாம்’ என்பது போன்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை இணைத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார் பாடலாசிரியர் ஷங்கர் குமார். பாடலின் மையக்

கருவை சொன்னதும் சரியாக பொருந்தும்படி பாடல் வரிகளை எழுதி அசத்திவிட்டார். இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன் இதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

வைக்கம் விஜயலக்ஷ்மி அம்மா ‘மழலை தாயே’ பாடலை பாடியது எங்களுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். பாடல் வரிகளை சில நாட்களுக்கு முன்பே குரல் பதிவாக அவருக்கு அனுப்பியிருந்தோம். அவற்றை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு உணர்வுப்பூர்வமாக பாடினார். ஒரு மணி நேரத்திலேயே முழு பாடலையும் ரெக்கார்ட் செய்து முடித்துவிட்டோம். அவ்வளவு திறமையானவரை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது. வைக்கம் விஜயலக்ஷ்மி அம்மாவின் குரலில் இந்தப் பாடலை கேட்கும் போது நிச்சயம் அனைவரும் நெகிழ்ந்து போவார்கள். பலரின் பங்களிப்பும் இணைந்து ஒரு அற்புதம் நிகழ்ந்ததை போல இந்தப் படைப்பு உருவாகியுள்ளது.

‘மழலை தாயே’ படைப்பினை தொடர்ந்து மேலும் பல படைப்புகளை வெளியிட இருக்கிறேன். அவை அனைத்தும் கலை மீது ஆர்வம் கொண்டவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். கலை எல்லோருக்குமானது. மக்கள் என்னை வரவேற்று எனக்கு ஆதரவளித்தது போலவே கலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒவ்வொருவரையும் அவர்களின் படைப்புகளையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்