அஸ்மா சற்றே நிம்மதியற்றுக் காணப்பட்டார். மகளைப் பார்க்க அம்மா வருகிறார். ‘அம்மா வருகிறார்’ என்றால் எல்லா மகள்களும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ஆனால், அஸ்மா சற்றுக் குழப்பத்தில் இருந்தார். அதற்குக் காரணம் இருந்தது. இறைத்தூதரின் சத்திய அழைப்பை ஏற்று, அஸ்மா முஸ்லிமாகியிருந்தார். ஆனால், அவருடைய தாய் முஸ்லிமாகவில்லை.ஏக இறைவனை ஏற்காத, முஸ்லி மல்லாத தாய் வரும்போது ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட, முஸ்லிமான மகள் அந்தத் தாயை வரவேற்கலாமா? அன்பு செலுத்தலாமா? உபசரிக்கலாமா?இதுதான் அஸ்மாவுக்கிருந்த குழப்பம்.“அம்மாவை அன்புடன் வரவேற்க வேண்டும்…நன்கு உபசரிக்க வேண்டும்” என்று அவருடைய பாசஉணர்வு துடித்தது. இன்னொரு புறம், இறைவனை ஏற்காத தாயை – அவர் என்னதான் தாய் என்றபோதிலும் எப்படி உபசரிப்பது என்று அவருடைய ஈமானிய உணர்வு தடுத்தது.
இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்த அஸ்மா, தமது சஞ்சலத்தைத் தீர்க்கும் ஒரே வழி, இறைத்தூதரிடமே இது பற்றிக் கேட்டுவிடுவதுதான் என்று தீர்மானித்தார்.“இறைத்தூதர் அவர்களே…! என்னைப் பார்க்க என் தாய் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை… அவரை வரவேற்கலாமா? அன்பு செலுத்தலாமா?”நபிகளார்(ஸல்) புன்னகையுடன் கூறினார்:“ஆம். நீ உன் தாயார் மீது அன்பு செலுத்த வேண்டும். அவரை உபசரிக்க வேண்டும். அவரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.”அஸ்மா அகமகிழ்ந்தார். “முஸ்லிமல்ல” என்பதால் அவர் தாய் இல்லை என்று ஆகிவிடுவாரா? தாய், தாய்தான் என்பதை நபிகளார்(ஸல்) அழகாக உணர்த்திவிட்டார்.
அம்மா வந்தார். வரவேற்று உபசரித்தார் அஸ்மா.திருக்குர்ஆன் கூறுகிறது:“பெற்றோர் நலனைப் பேண வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது.”(குர்ஆன் 31:14)அதே சமயம் “இணைவைக்கும்படி பெற்றோர் நிர்பந்தித்தால் அந்த விஷயத்தில் அவர்கள் பேச்சை ஏற்றுக்கொள்ளாதே. மற்றபடி இவ்வுலகில் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்” என்றும் இறைவன் அறிவுறுத்தியுள்ளான். (குர்ஆன் 31:15)
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“தாயின் காலடியில்தான் சொர்க்கம் உள்ளது”- நபிமொழி