பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் வசிக்கும் தனஞ்செய் மேத்தா குடும்பத்தினரின் வீட்டிற்கு அருகே, சில இளைஞர்கள் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை அவரது மனைவி மகாலட்சுமி பலமுறை தட்டிக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறுகள் ஏற்பட்டுள்ளன.சமீபத்தில் ஏற்பட்ட தகராறின்போது, தனஞ்செய் மேத்தாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
இதற்குப் பழிவாங்கும் நோக்கில் இருந்த அந்த இளைஞர்கள், நேற்று தனஞ்செய் மேத்தாவின் மனைவி மகாலட்சுமி மற்றும் அவர்களது 19 வயது மகள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். காலில் குண்டு பாய்ந்த தனஞ்செய் மேத்தா, பாட்னாவின் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலை நேரில் கண்ட சாட்சியான தனஞ்செய் மேத்தா, மருத்துவமனையில் இருந்தபடியே காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தத் தாக்குதலானது முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பீகாரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்ற எதிர்க்கட்சியினர், முதல்வர் நிதிஷ் குமார் அரசைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.