பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகர் தெற்கு 4-வது வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மகாராணியும் (54), மகள் கிருத்திகாவும் (35) நேற்று மதியம் அருகில் உள்ள இந்தியன் வங்கியில் புதிய கணக்கு தொடங்கிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டனர். பல்லடம் நால்ரோட்டில் வந்தபோது, பொள்ளாச்சியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு துணி பாரம் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி திடீரென ஸ்கூட்டர் மீது கவிழ்ந்தது. இதில் கன்டெய்னருக்கு அடியில் சிக்கிய தாயும், மகளும் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் ராட்சத கிரேன் மூலம் கன்டெய்னரை அகற்றி தாய், மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.