சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பாலியல் தொழிலில் பல பெண்களை ஈடுபடுத்தியதாக 4 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாலியல் தொயிலுக்கு உட்படுத்தும் இடைத்தரகர்களை (புரோக்கர்) கைது செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூவ் சதுர்வேதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மயிலாம்பாறை என்னும் இடத்தில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் பேரில் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் உரிமையாளர் தேவி என்பவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர், வறுமையில் உள்ள பெண்களை குறி வைத்து அதிகம் பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து பாலியல் பெண் புரோக்கர் தேவியிடமிருந்து சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை சங்கராபுரம் காவல் துறையினர் மீட்டனர். பெண் புரோக்கர் தேவி(36) மற்றும் அவரது தாய் ராஜாம்பாள்(52) அங்கிருந்த ஜெயராமன் (58 ) ஆகியோரை கைது செய்தனர். சங்கராபுரத்தில் வறுமையில் உள்ள பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய தாய் மகள் உட்பட 3 பேர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.