பல்லாவரம்: பம்மல், அனகாபுத்தூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 1வது மண்டலம் பம்மல் பகுதியில் அனகாபுத்தூர் குருசாமி நகர், எம்.ஜி.ஆர் நகர், திரு நகர், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பை அள்ளாததால் ஆங்காங்கே குப்பை குவியல் குவியலாக காணப்படுகிறது. அத்துடன் கால்வாய்களை முறையாக தூர்வாராததால், கழிவுநீர் தெருக்களில் தேங்கி நின்று, தூர்நாற்றம் வீசுகிறது.
இதன் மூலம் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொசுக்கடி காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பம்மல் மண்டல அலுவலகத்திலும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, முறையாக கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிப்பதுடன், தெருக்களில் தேங்கிக் கிடக்கும் குப்பையை சுத்தம் செய்தும், கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்தும், கொசுக்களின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.