போபால்: 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளுடன் தேடப்பட்ட நக்சல் தலைவனை அவனது மனைவியுடன் மத்திய பிரதேச ஏடிஎஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நக்சல் தலைவன் ஒருவன் பதுங்கியிருப்பதாக பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சல் தலைவனும் தெலங்கானாவை சேர்ந்தவனுமான அசோக் ரெட்டி என்பவனை சுற்றிவளைத்து கைது செய்தது. இதுகுறித்து மத்திய பிரதேச காவல்துறை வௌியிட்ட அறிவிப்பில், ‘தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலைமறைவாக இருந்த நக்சல் கும்பல் தலைவன் அசோக் ரெட்டியை 4 மாநில போலீசார் தேடி வந்தனர். அவனது இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.82 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோல்கொண்டாவில் இருந்த அசோக் ரெட்டி மற்றும் நாராயண்பூரில் (சட்டீஸ்கர்) வசித்து வந்த அவனது மனைவி ரைம்தி பொடாய் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அசோக் ரெட்டி மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கலவரம், போலீஸ் மீதான தாக்குதல், கடத்தல், தீ வைத்து எரித்தல், வெடிபொருள் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தம்பதியிடமிருந்து தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி, ரூ.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை மீட்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.