திருவொற்றியூர்: மாதவரத்தில் மொபட் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் இன்சூரன்ஸ் நிறுவன பெண் அதிகாரி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவருடன் சென்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி படுகாயமடைந்தார். விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சொர்ணலட்சுமி (40), இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அவரது தோழி பிரபா (42). இவர் ஒன்றிய அரசில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி செல்வம் என்பவரின் மனைவி ஆவார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் உள்ள தங்களது கல்லூரி தோழியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சொர்ணலட்சுமியும், பிரபாவும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் விழா முடிந்து இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மாதவரம் 200 அடி சாலையில் மஞ்சம்பாக்கம் சின்ன ரவுண்டனா அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் சொர்ணலட்சுமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்து வந்த பிரபாவிற்கு இரு கால்களும் உடைந்தன. அங்கிருந்த போக்குவரத்து போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொர்ணலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.