சென்னை: ‘நிலவில் உலா வரும் ரோவரில் உள்ள கேமரா லேண்டரை படம் பிடித்துள்ளது’ என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் அந்த படங்களையும் வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவரும் நிலவில் ஆய்வு பணியை தொடங்கி உள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ரோவரில் பொருத்தப்பட்டுள்ள வழிகாட்டி கேமரா இந்த திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் படத்தை எடுத்துள்ளது.
பிரக்யான் ரோவர் நேற்று காலை விக்ரம் லேண்டரை படம் எடுத்தது. இந்த வழிகாட்டி கேமராக்கள் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் ரோவரில் உள்ள லேசர் இண்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி நிலவின் தரைப்பரப்பில் சல்பர் இருப்பதையும், மேலும் பல கனிமங்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளது. மேலும் ரோவர் எடுத்த படங்களில் லேண்டரில் உள்ள 2 கருவிகளான இல்சா மற்றும் சாஸ்டே ஆகியவை நிலவில் ஆய்வு செய்யவதையும் இந்த படங்களில் தெளிவாக காண முடிகிறது.