புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இனி அடுத்த 14 நாட்கள் நிலவில் பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு அடுத்த சாதனையை படைக்க உள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் திட்டமிட்டபடி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இருள் சூழ்ந்த தென் துருவத்தில் இனி சந்திரயான்-3 அடுத்தகட்ட சாதனை படைக்க எஞ்சி இருப்பது நிலவு நேரப்படி வெறும் பாதி நாள்தான். எளிதாக சொல்ல வேண்டுமானால், நிலவில் ஒருநாள் என்பது பூமியில் 28 நாள். பூமி நேரப்படி நிலா தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 28 நாட்கள் ஆகும். சந்திரயான்-3 தரை இறங்கி உள்ள பகுதியில், பூமி நேரப்படி நிலவில் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருக்கும், 14 நாள் இருள் சூழ்ந்திருக்கும்.
சந்திரயான்-3ன் ‘விக்ரம்’ லேண்டர் மற்றும் ‘பிரக்யா’ ரோவர் ஆகியவை சோலார் பேனல்கள் மூலம் மட்டுமே செயல்பட முடியும். அவை செயல்பட சூரிய வெளிச்சம் தேவை. எனவே, சூரிய வெளிச்சம் உள்ள 14 நாட்கள் மட்டுமே லேண்டர், ரோவரின் ஆயுட்காலமாக இருக்கும். இந்த 14 நாட்களில் லேண்டரும், ரோவரும் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன. லேண்டரில் மொத்தம் 4 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. அவை, ராம்பா (ரேடியோ அனாடமி ஆப் மூன் பவுண்ட் ஹைபர்சென்சிடிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர்), சேஸ்ட் (சந்திராஸ் சர்பேஸ் தெர்மோ பிசிகல் எக்ஸ்பிரிமென்ட்), ஐஎல்எஸ்ஏ (இன்ஸ்ட்ரூமென்ட் பார் லூனார் செய்ஸ்மிக் ஆக்டிவிட்டி), எல்ஆர்ஏ (லேசர் ரிடிரோரெப்ளக்டர் அர்ரே) ஆகியவை ஆகும்.
இதில் ராம்பா நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யும். நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால் பகலில் அதிக வெயிலும், இரவில் தாங்க முடியாத குளிரும் நிலவும். இத்தகைய நிலைக்கான காரணம் குறித்து ராம்பா கருவி ஆய்வு செய்யும். அதன் மூலம் நிலவின் வயதையும் கணிக்க முடியும். அடுத்ததாக சேஸ்ட் கருவி, நிலவில் உள்ள பாறை, கற்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும். அவை நிலவில் நிலவும் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு உள்ளதா அல்லது உடைந்து போகக் கூடியதா என்பதை கண்டுபிடிக்கும். இதன் மூலம் அதிக வெப் பத்தால் மண்ணில் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.
ஐஎல்எஸ்ஏ கருவி, நிலவின் மேற்பரப்பில் நிலவும் அதிர்வுகளை ஆய்வு செய்யும். பூமியை போலவே நிலவிலும் அதிர்வுகள் உள்ளதா என்பது குறித்து கண்டறியும். இத்தகைய ஆய்வுகள், நிலவில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களை உறுதிபடுத்தும். கடைசியாக எல்ஆர்ஏ கருவி, நிலவின் சுழற்சியை ஆய்வு செய்யும். நிலவு பூமியை சுற்றி வரும் போது அதன் இயக்கம் குறித்தும், அதிர்வுகள் குறித்தும் ஆய்வு செய்யும். இதே போல விக்ரம் ரோவரில் 2 ஆய்வுக் கருவிகள் உள்ளன. அவை எல்ஐபிஎஸ் (லேசர் இன்டக்ட் பிரேக்டவுண் ஸ்பெக்ட்ரோஸ்கோப்ஸ்), ஏபிஎக்ஸ்எஸ் (ஆல்பா பார்டிகிள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்).
இதில் எல்ஐபிஎஸ் என்பது நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம மற்றும் வேதியியல் கலவைகளை ஆய்வு செய்யும். ஏபிஎக்ஸ்எஸ் என்பது நிலவில் 10 செமீ வரை துளையிட்டு, அங்குள்ள பாறை மற்றும் மண்ணில் உள்ள மெக்னீசியம், டைட்டானியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்யும். இவை நிலா மனிதன் வாழக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை அறிய முக்கியமானவை. எனவே அடுத்த 14 நாட்கள் சந்திரயான்-3 அனுப்பும் தரவுகள் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளது. அமெரிக்காதான் முதலில் நிலவுக்கு மனிதனை அனுப்பினாலும், அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை முதலில் கண்டறிந்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
* உலகளவில் உச்சம் தொட்டது இஸ்ரோ
உலக அரங்கில், விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா மூதாதையர்கள் என்றாலும், இந்தியா சந்திரயான்-3 மூலம் மகத்தான சாதனை படைத்து, உலகளவில் விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டுள்ளது. சமீபத்தில் நிலவின் தென் துருவ பகுதியில் ரஷ்யா தரையிறக்க முயன்ற லூனா-25 விண்கலம் தோல்வியில் முடிந்தது. ரஷ்யாவால் முடியாத காரியத்தை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியிருக்கிறது. இதன் மூலம் மிகக் குறைந்த செலவில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. ஏற்கனவே உலகிலேயே மலிவான செலவில் மிக வெற்றிகரமாக செயற்கைகோள்களை விண்ணுக்கு ஏவி இஸ்ரோ சாதித்து வருகிறது. தற்போது நிலவிலும் கால் பதித்துள்ளதன் மூலம் இந்தியாவில் இனி விண்வெளி முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது. பல உலக நாடுகளும் அவர்களின் செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோவை நாடும்.
* ஆய்வினால் என்ன பயன்?
சந்திரயான்-3 கண்டறியும் ஆய்வுகள் மூலம், இனி விண்வெளி பயணத்திற்கு தேவையான பொருட்களை பூமியில் இருந்தே கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்காது. அதற்கான தளத்தை நிலவிலும் அமைக்கலாம். அதோடு, நிலவில் இருக்கும் இயற்கை கனிமங்கள், தனிமங்களை பூமியில் வாழும் மனிதர்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு.