செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கிய பேரூராட்சி துணை தலைவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சம்யுக்தா அய்யனார் தலைமை தாங்கினார். பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 20 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் முன்னிலையில் அரசு பணிகள் ஒப்பந்தம் குறித்து விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது, அங்கு வந்த பேரூராட்சி மன்ற துணை தலைவரும், பாமக முன்னாள் மாவட்ட கிழக்கு செயலாளரும், 7வது கவுன்சிலருமான கணபதி, அரசு பணி டெண்டர் விடுவதை தனக்கு தெரியாமல் எப்படி விடப்படலாம், அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணியுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரனுக்கும், கணபதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, வாக்குவாதம் முற்றியதில் கணபதி, பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செயல் அலுவலர் மகேஸ்ரன், சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அரசு பணி செய்யாமல் குறுக்கிடுவது, கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கணபதியை கைது, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.