சென்னை: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. படிக்கும் போதே வருமானம் ஈட்டும் வகையிலான புதிய டிப்ளமோ படிப்பு, நடப்பு கல்வியாண்டு முதல் 8 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஐடிஐ, டிப்ளமோ படிப்பின் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டது. முன்பு பிட்டர், வெல்டர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல்வேறு ஐடிஐ படிப்புகளுக்கு பெரிய கிராக்கி இருந்தது.
அதேபோல் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ், டிப்ளமோ சிவில், டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோ எலக்ட்ரிக்கல், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ கேட்டரிங் என பல்வேறு டிப்ளமோ படிப்புகளை படிக்கவே 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இன்றைக்கு டிப்ளமோ படிப்பதற்கு பதில் பிளஸ் 2 முடித்துவிட்டு டிகிரி படிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். மாணவர்கள் மத்தியில் டிப்ளமோ படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வரும் நிலையில், மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
அந்த வகையில், தங்களின் தகுதியை வேலை செய்துகொண்டே ஒரே நேரத்தில் மேம்படுத்துவதற்காக, 2023-24ம் ஆண்டில் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிஜிட்டல் உற்பத்தி சார்ந்த டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. படிக்கும் போது வருமானம் ஈட்டும் வகையில், டிஜிட்டல் உற்பத்தியில் டிப்ளமோ படிப்புகளை 2023-24ம் கல்வியாண்டு முதல் ஊத்தங்கரை, கெலமங்கலம், கடத்தூர், ஜோலார்பேட்டை, வனவாசி ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் கல்வியாண்டு முதல் 8 கல்லூரிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்து உசிலம்பட்டி, மதுரை, ஆண்டிபட்டி, செக்கானூரணி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, எட்டயபுரம் ஆகிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகளும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கல்லூரிகளிலும் தலா 30 இடங்கள் உள்ளன.
இதில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே ஊக்கத்தொகையும், பயிற்சி காலத்தில் தங்கும் இடம் மற்றும் உணவும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டிப்ளமோ படிப்பை முடிக்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் நேரடியாக 2ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கு தகுதி பெறுவார்கள். சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், பேக்கேஜிங் தொழில்நுட்பம், பெட்ரோலிய வேதி பொறியியல், காலணி தொழில்நுட்பம், தோல் மற்றும் உடை அலங்கார தொழில்நுட்பம், துணி மற்றும் உடை அலங்காரம், ஆடை தொழில்நுட்பம் ஆகிய பட்டயப்படிப்புகள் நடப்பாண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
படிப்பு: டிப்ளமோ டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம்
கல்வித்தகுதி – 12ம் வகுப்பு தேர்ச்சி, 10 மற்றும் 2 வருட ஐடிஐ தேர்ச்சி
* 3 மாதம் கல்லூரியில் வகுப்பு, 9 மாதம் பயிற்சி
* முதலாம் ஆண்டில் படிக்கும்போது மாதம் ரூ.4ஆயிரம், பயிற்சியின்போது ரூ. 8 ஆயிரத்து 750 ஊக்கத்தொகை.
* 2ம் ஆண்டில் மாதம் ரூ.4 ஆயிரத்து 250, பயிற்சியின்போது ரூ. 9 ஆயிரத்து 550
* 3ம் ஆண்டில் மாதம் ரூ. 4 ஆயிரத்து 500, பயிற்சியின்போது ரூ. 10 ஆயிரம்.
படிப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டிப்ளமோ
கல்வித்தகுதி – 12ம் வகுப்பு தேர்ச்சி
* 3 மாதம் கல்லூரியில் வகுப்பு, 9 மாதம் பயிற்சி
* முதலாம் ஆண்டில் படிக்கும்போது மாதம் ரூ. 4 ஆயிரம், பயிற்சியின்போது ரூ. 8 ஆயிரத்து 750 ஊக்கத்தொகை.
* 2ம் ஆண்டில் மாதம் ரூ. 4 ஆயிரத்து 250, பயிற்சியின்போது ரூ. 9 ஆயிரம்
* 3ம் ஆண்டில் மாதம் ரூ. 4 ஆயிரத்து 500, பயிற்சியின்போது ரூ. 10 ஆயிரம்.