Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பருவமழை காலங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் புகாமல் தடுக்க வெள்ளத் தடுப்பு கதவுகள்: மெட்ரோ அதிகாரிகள் தகவல்

* தேங்கும் நீரை அகற்றும் வகையில் 250 பம்புகள் தயார்

* தண்ணீர் கசிவு கண்காணித்து சீரமைக்க கூடுதல் குழுக்கள்

சென்னை: பருவமழையின் போது மழைநீர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புகுந்து விடாமல் இருக்க வெள்ளத்தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2ம் கட்டமாக 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்தாண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால், சாலைகளிலும் ஆங்காங்கே குளம்போல, மழைநீர் தேங்கியது.

மாநகர பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேக்கம், உயர்மின் அழுத்த சாதனங்களில் பாதிப்பு போன்ற காரணங்களால், மின் ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பின்றி தொடர்ந்து இயங்கியது. குறிப்பாக, அத்தியாவசியப் பணிகளுக்கு சென்றவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மிகவும் உதவியாக இருந்தது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால், பேருந்து சேவை இயங்குமா என்ற சந்தேகத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி பொதுமக்கள் வந்து, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர்.

ஆனால் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக உள்ளது. அதன்படி சென்னையில் நீரில் மூழ்கும் நிலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் சில வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி அரசினர் தோட்டம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணாநகர் கிழக்கு, தண்டையார்பேட்டை, டிஎம்எஸ் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நீர் உட்புகுவதைத் தடுக்க வெள்ளத்தடுப்பு கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 2ம் கட்ட திட்டத்தில் குறிப்பாக ஓட்டேரி, மெரினா கடற்கரை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மழைகாலங்களில் பொதுவாக வெள்ளம் தேங்கக்கூடிய பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில் வெள்ளத் தடுப்பு கதவுகள் வைக்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறியதாவது: மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆனால் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணிகள் தடைப்படும். பெரும் மழை, காற்று இருந்தால் கிரேன்கள் நிலைகுலைந்து விடும் என்பதால் பணிகள் நிறுத்தப்படும். ஆனால் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும். கடந்தாண்டு பருவமழையின் போது மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் வெள்ள தடுப்பு கதவுகள் வைக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள அரசினர் தோட்டம் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்து பிரச்சனை எதிர்க் கொண்டதால் இந்தாண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவும், சுரங்கப்பாதைகளிலும் தேங்கும் நீரை அகற்றவும் 250க்கும் மேற்பட்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட திட்டத்தில் குறிப்பாக மெரினா கடற்கரை நிலையத்திற்கு ஐரோப்பிய தொழில் நுட்பத்துடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வெள்ள வாயில்கள் நிலையத்துக்கு கீழே கட்டப்படும். அதேபோல நீர் மட்டம் ஒரு அளவுக்கு மேல் அதிகரித்தால் கடல் நீர் உள்ளே நுழைவதை தடுக்க ரயில் நிலையத்தின் 2 நுழைவு பாதைகளிலும் வெள்ளக் கதவுகள் அமைக்கப்படுகிறது. இதில் கடல் நீர் புகுந்தால் தானாகவே இந்த கதவுகள் மூடி ரயில் நிலையத்துக்குள் நீர் புகுவதை தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.