பெங்களூரு: கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வழக்கமான டிஎம்சி தண்ணீர் திறக்க முடியவில்லை என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘கர்நாடகாவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த வகையில் பருவ மழை பெய்யாமல் இருப்பதால், அணைகள் நிரம்பாமல் உள்ளது. மாநிலத்தில் 120 தாலுகாகள் கடும் வறட்சியில் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாமல் இருப்பதால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் குறைவாக குறைந்துள்ளது. மாநில அணைகளில் தற்போதுள்ள நீரின் அளவை கணக்கிட்டு பார்க்கும்போது, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அளவு தண்ணீர் திறக்க முடியவில்லை. மழை பெய்யும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி வருகிறது. அந்த விசாரணையின்போது, மாநில அரசின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள், நமது மாநிலத்தின் நியாயத்தை எடுத்துரைப்பார்கள். இது தொடர்பாக நானே டெல்லி சென்று வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினேன். நேரம் கிடைத்தால் வரும் 21ம் தேதிக்கு முன் மீண்டும் டெல்லி சென்று வக்கீல்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன்’ என்றார்.