பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு மங்களூரு வாமஞ்சூர் அருகே உள்ள கெத்திக்கல்லில் ஒரு குன்று சரிந்து விழுந்தது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, சிவமோகா, குடகு, மற்றும் சிக்கமகளூரு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பெல்காம், கடக், ஹாவேரி, தார்வாட், சாமராஜநகர், தாவனங்கரே, ஹாசன் மற்றும் மைசூரு, பாகல்கோட், கொப்பல், மண்டியா, மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.