தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாலாறு, செம்பரம்பாக்கம் ஏரி, நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றில் குடிநீர் வழங்கப்படுகிறது. சுமார் 215 எம்எல்டி தண்ணீர் தேவை உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு 73 எம்எல்டி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால், 3 நாட்களுக்கு ஒரு முறை வீதம், வார்டு வாரியாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இது தவிர சில பகுதிகளில் லாரிகள் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த குடிநீரை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, அதன் பின்னரே பொதுமக்களுக்கு விநியோகிக்கின்றனர். தற்போது குளிர் காலம் தொடங்கி விட்டதாலும், மழைக்காலம் தொடங்கி இருப்பதாலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரை முழுமையாக பரிசோதித்து அதில் குளோரின் அளவுகள் சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே வீடுகளுக்கு விநியோகிக்கின்றனர். தற்போது, ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் 1 லட்சம் முதல் 3 லட்சம் கொள்ளளவு வரை கொண்ட சுமார் 86 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், 32 கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் உள்ளன. மாநகராட்சியில் மொத்தம் 1 லட்சத்து, 84 ஆயிரத்து, 547 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகள் வாரத்திற்கு இருமுறை சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை தாம்பரம் மாநகராட்சி வழங்கி வருகிறது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டல உதவி பொறியாளர் சங்கர் கூறுகையில், ‘‘கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்து, பின்னர் அதனை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அனுப்புகிறோம். ஒவ்வொரு முறையும் தண்ணீரை பரிசோதித்து பின்னர் தான் விநியோகிப்போம்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கடைசி பகுதிக்கு செல்லும் இடத்தில் மீண்டும் தண்ணீரை பரிசோதித்து அதில் குளோரின் அளவு குறைந்தது 2 பிபிஎம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வோம். தற்போது குளிர் காலம் தொடங்கி விட்டதால் 5 பிபிஎம், 7 பிபிஎம் வரை பார்ப்போம். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2 பிபிஎம் வரை தான் வைக்க வேண்டும். அதிகபட்சமாக 3 பிபிஎம் வைப்போம். மழைக்காலம் என்பதால் சில பகுதிகளில் டெங்கு போன்ற சில பிரச்னைகள் இருக்கும். அதற்காக நாங்கள் குளோரின் அளவை 3 பிபிஎம் வரை அதிகப்படுத்துவோம்.
3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகிப்பதால் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பகுதிகளில் பரிசோதிப்போம், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடங்களில் பரிசோதனை செய்யப்படும் ஒரே பகுதியில் பரிசோதனை நடைபெறாது. கிழக்கு, மேற்கு தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாலாறு மூலம் தண்ணீர் கிடைக்கிறது. அதேபோல், சிட்லபாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறு மூலமும் குடிநீர் கிடைக்கிறது. புதிதாக சில திட்டங்கள் தயார் செய்யப்படுகிறது. தாம்பரம் மாநகராட்சியில் 95 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 மற்றும் 5வது மண்டலங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பம்மல், திருநீர்மலை, அனகாபுத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதிகளுக்கு தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் கிடையாது. அதற்கு முன்னர் தண்ணீர் வினியோகத்தில் சில தாமதங்கள் இருந்தது. தற்போது அது போன்ற தாமதம் இல்லை. 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. 215 எம்எல்டி தண்ணீர் ஒருநாளுக்கு கொடுக்க வேண்டும், ஆனால் அந்த அளவுக்கு தண்ணீர் இல்லை. இதனால் 73 எம்எல்டி தண்ணீர் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் 500 எம்எல்டி தண்ணீர் கிடைக்கும் போது தினமும் தண்ணீர் வழங்கப்படும்,’’ என்றார்.