Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மழைக்கால கூட்டத்தொடரில் என்னென்ன மசோதாக்கள் தாக்கல்: ஒன்றிய அரசு பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக மக்களவை செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை பரிசீலித்து நிறைவேற்ற அரசு பட்டியலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. இதுதவிர, தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது அல்லது தடை செய்வது தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிறப்பு, இறப்பு தாமதமாக பதிவு செய்வதை தடுக்க பிறப்பு இறப்பு பதிவு திருத்த மசோதா, வருமான வரி திருத்த மசோதா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன. மேலும், தொகுதி மறுவரையை உள்ளடக்கிய மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, பிரதமர், முதல்வர்கள் மற்றும் பிற அமைச்சர்கள் கைதாகி 30 நாள் சிறையில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

* எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் உள்ளோம்

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிதலைவர் சோனியா காந்தி இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை அரசு கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்ற இம்முறையும் அவர்களுக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காது.

இந்த மசோதாவை தோற்கடிக்க ஒன்றிணைந்து வாக்களித்த திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்’’ என்றார். நீட் உள்ளிட்ட தேர்வுகள் குளறுபடி, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட விவகாரங்களை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.