மங்களூரு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மங்களூரு, சிக்கமகளூரு, குடகு, உடுப்பி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறு, அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மங்களூரு வாமஞ்சூர் அருகே உள்ள கெத்திக்கல்லில் ஒரு குன்று சரிந்து விழுந்தது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஷிவமொக்காவில் கடும் மழையில் காந்தாரா திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது நீர்த்தேக்கத்தில் படகில் கூடாரம் அமைத்து படப்பிடிப்பை நடிகர் ரிஷப் ஷெட்டி நடத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது.
இதில் ரிஷப்ஷெட்டி உள்பட 30 திரைப்பட பணியாளர்கள் நீர்த்தேக்கத்தில் விழுந்தனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் . கேரளாவில் கனமழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். கோட்டயம் அருகே உள்ள செறுவள்ளி ரப்பர் எஸ்டேட்டில் ரப்பர் மரம் விழுந்து பைக்கில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளி முனியசாமி உயிரிழந்தார்.