ராமநாதபுரம் : பருவ மழை துவங்க உள்ள நிலையில் ஆடி பட்டம் மாதமான ஆடி பெருக்கையொட்டி தரிசாக கிடக்கும் விவசாய நிலங்களை சீரமைத்து,உழவார பணிகளை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளா பகுதி தென்மேற்கு மற்றும் தமிழகத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பொழிய துவங்கினால் அதன் தாக்கம் நாகர்கோயில், குற்றாலம் முதல் ராமநாதபுரம், தொண்டி வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் மழை பெய்யும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயம் செய்வதற்கு துவக்கம் மற்றும் முதல் பட்டமான ஆடி பட்டத்தில் வரக்கூடிய ஆடி பெருக்கில் உழவார பணிகளை துவங்குவது வழக்கம்.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சிறு தூரல் மழை கூட பெய்யவில்லை. இருந்த போதிலும் ஆடிபட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, நயினார்கோயில், பரமக்குடி, போகலூர், சத்திரக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சிக்கல் மற்றும் சாயல்குடி சுற்று வட்டார பகுதிகளில் வழக்கமாக பயிரிடப்படும் வயற்காடுகள், விவசாயம் செய்யாமல், சீமை கருவேல மரம் வளர்ந்து கிடந்த வயற்காடு, தரிசாக கிடந்த வயற்காடு உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆடி பெருக்கு என்பதால் ஒரு சில இடங்களில் சாமி கும்பிட்டு, வயற்காட்டில் உழவு பணிகளை துவங்கினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘விவசாயம் செய்வதற்கு உகந்ததாக ஆடி மாதம் முதல் மார்கழி வரை பட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பட்டமான ஆடி மாதத்தில் தரிசான வயற்காடுகளில் சீமை கருவேல மரச்செடிகள் உள்ளிட்ட தேவையற்றவையை அகற்றுதல், பயன்பாட்டில் உள்ள வயற்காட்டில் பழைய காய்ந்த செடி, கொடிகள், அறுவடைக்கு பிறகு எஞ்சியுள்ள பயிர்கட்டைகள் போன்றவற்றை சீரமைப்பு செய்தோம். தற்போது மழை இல்லாவிட்டாலும் கூட, ஆடி பெருக்கை முன்னிட்டு உழவு ஏர் மாடுகள், டிராக்டரை கொண்டு உழவார பணியை துவங்கியுள்ளோம்’’ என்றனர்.
ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் பிரதான பருவ மழையான வடகிழக்கு பருவமழை துவங்கும். இதனால் விவசாயிகள் விவசாய நிலங்களை சீரமைத்து தயார் படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் தற்போது உழவு மேற்கொண்டால், அறுவடைக்கு பிறகு எஞ்சியுள்ள பண்ணை பயிர்கழிவுகள், பயிர்கட்டைகள் இயற்கை உரமாக மாறும்.
பருவமழை பெய்யும்போது மழைநீர் வீணாகாமல் விவசாய நிலத்தில் சேமிக்கப்படும். மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும். நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும், மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சி முட்டை அழிக்கப்படும். களை செடிகளின் விதைகளும் அழிக்கப்படும். இதனால் வருகின்ற பருவ கால விவசாயத்திற்கு நன்மைகள் ஏற்படும். மேலும் விவசாயிகள் மண் பரிசோதனை, விதை நேர்த்தி உள்ளிட்டவற்றிற்கு வேளாண் அதிகாரிகளிடம் உதவி பெறலாம் என்றார்.
மானிய விதை நெல் ரெடி
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு விளையக்கூடிய நெல் விதைகள் விதை கிராம திட்டம், உணவு மற்றும் சத்து பாதுகாப்பு இயக்கம்(அரிசி) திட்டத்தின் கீழ் அரசு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பாரம்பரிய நெல் விதைகளான சிவப்பு கவுனி, கரும்புறுவை, குளிஅடிச்சான், சித்திரைக் காரி, ஆடுதுறை 45 மற்றும் கோ 51, ஆர்.என்.ஆர் 15048, டிபிடி 5204, என்.எல்.ஆர் 34449 ஆகிய ரக நெல் விதைகள் 50 கிலோ மூட்டைகள் மானிய விலையில் விற்கப்படுகிறது. விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.
நிவாரணம் வேண்டும்
கடந்தாண்டு வறட்சி ஏற்பட்டதில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதற்காக வறட்சி நிவாரணமாக ரூ.133 கோடி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதுபோன்று விவசாயிகள் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு பிரிமீயம் தொகை செலுத்தி இருந்தனர். ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான பயிர்காப்பீடு திட்ட இழப்பீடு தொகையை ஒன்றிய அரசு வழங்கவில்லை. எனவே உழவார பணிகள் மற்றும் இந்தாண்டு விவசாயம் செய்வதற்கு பணம் தேவைப்படுவதால் வறட்சி நிவாரணம் தொகை மற்றும் பயிர்காப்பீடு இழப்பீடு தொகையை அரசுகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.