Friday, June 20, 2025
Home மருத்துவம்ஆலோசனை குரங்கு அம்மை சிகிச்சை என்ன?

குரங்கு அம்மை சிகிச்சை என்ன?

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

வைரஸ் 3600 குறுந்தொடர்

பொதுநல மருத்துவர் சுதர்ஷன் சக்திவேல்

வைரஸ்கள் நம் ஆதிகாலம் தொட்டே நம்மைத் தொடரும் எமனின் ஏஜண்டுகள். மனிதன் அரைக்குரங்காய் வாழ்ந்த காலம்தொட்டே மனிதனைத் தாக்கி அழித்து தம்மைப் பெருக்கிக்கொண்டு வாழும் கொடூரமான நுண்ணுயிர்கள் வைரஸ்கள். இந்த வைரஸ்கள் பற்றி ஆராய்ச்சி இன்னமும் முடிந்தபாடில்லை. வைரஸ்கள் பற்றி மனிதன் புரிந்துகொள்ள தொடங்கியது பதினெட்டாம் நூற்றாண்டு முதல்தான். திமித்ரி இவ்னோஸ்கி என்ற நிபுணர் 1892ம் ஆண்டுதான் வைரஸ் என்ற நுண் கிருமியைக் கண்டறிந்தார். ஆனால், அதற்கு பல ஆண்டுகள் முன்னரே அதாவது 1728ம் ஆண்டே தொற்றுநோய்களை உருவாக்கும் நோய்க் காரணி என்ற ஒரு கருத்தியல் பதிவு செய்யப்பட்டது.

சில நுண்ணியலாளர்கள் வைரஸ்களை நுண்ணுயிர் என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவை என்ற ஒரு கருத்து இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் நோயை ஏற்படுத்துவதனாலும், சிலர் இதனை நோய்க் காரணி என்றே குறிப்பிடுகின்றனர். எப்படியாய் இருந்தாலும் மனித வாழ்வைத் தீவிரமாய் பாதிப்பதால் வைரஸ்கள் நிச்சயம் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. நம்மால் வெல்லப்பட வேண்டியவை. வைரஸ்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் நம்மை இந்த தீய நுண்மிகளிடமிருந்து காத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்கும். அதற்காகவே இந்தக் குறுந்தொடர்.

நம் அன்றாட வாழ்வில் வைரஸ்கள் பற்றி நாம் அதிகம் கவனம் கொள்ளாமல் இருந்தோம். கொரோனா என்ற வைரஸ் வரும் வரை இதுதான் நிலைமை. எப்போது கொரோனா வைரஸ் தொற்று வந்ததோ, அதில் இருந்து வைரஸ்கள் உண்டாக்கக்கூடிய நோய்தொற்றுக்களைப் பற்றி மக்கள் அதிக கவனம் பெற தொடங்கி விட்டது.

நாம் சில நோய் தொற்றுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவை வைரஸ் மூலம்தான் பரவுகிறது என்பதை அறியாமல் இருக்கிறோம். உதாரணமாக, சின்னம்மை, குரங்கு அம்மை, முருங்கை அம்மை, எய்ட்ஸ், ஹெப்பாடிட்டிஸ், ரூபெல்லா, கொரோனா, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரேபீஸ் – இவை எல்லாம் வைரஸ் மூலம் பரவக்கூடிய நோய்கள்தான். வைரஸ் நோய்களை நாம் என்றைக்கும் அலட்சியமாகக் கருதக்கூடாது. அவை பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை.இந்த இதழில் (orthopox viruses) ஆர்த்தோபாக்ஸ் வைரஸால் உண்டாகக்கூடிய சின்னம்மை, குரங்கம்மை பற்றி பார்க்கலாம்.

1. சின்னம்மை

சின்னம்மை என்பது வேரியோலா என்ற வைரஸ் மூலம் வரக்கூடிய நோய். இந்த வைரஸ் ஆனது, நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளான நபரிடம் இருந்து சுவாசப்பாதை வழியாகப் பரவுகிறது. இந்த தொற்று நமது உடலில் வந்த பிறகு ஒரு 10-14 நாட்கள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. அதற்குப் பிறகு, காய்ச்சல் முதல் அறிகுறியாக வரும். காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே செல்லும். காய்ச்சலுடன் கூடவே சிறிய சிறிய சிவப்பு அல்லது ஊதா நிறத் தடிப்புகள் தோலில் தோன்றும். கூடவே தலைவலி, வாந்தி, மயக்கம்கூட வரும். இந்த வைரஸ் தொற்று இப்பொழுது உலகில் இல்லை. ஆம், இத்தகைய கொடிய வைரஸ் எப்படி தடுக்கப்பட்டது பார்ப்போம்.

எப்படித் தடுக்கப்பட்டது?

முதலில் 1967ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கியது. இது மட்டும் இல்லாமல் நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல், தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொண்டது. இந்த நோயின் பாதிப்பு கடைசியாக 1975ல் இந்தியாவில் நடந்தது. அதன் பிறகு, 1977ல் சோமாலியாவில் இந்நோயின் கடைசி பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் சின்னம்மை வைரஸ் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. உலக சுகாதார நிறுவனம் – 1980ல் சின்னம்மை வைரஸ் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தடுப்பூசி

சின்னம்மைக்கு எதிரான முதல் தடுப்பூசியை 1796ல் எட்வர்டு ஜெனர் உருவாக்கினார். இதுவே உலகின் முதல் தடுப்பூசி எனப்படும்.

சில மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி வகைகள்

1. ட்ரைவேக்ஸ் (Dryvax)
2. அகம் 2000 (Acam 2000)
3. எம்விஏ-பிஎன் (MVA- BN)
சின்னமைக்கான எதிர்கால பார்வை

என்னதான் சின்னம்மை ஒழிக்கப்பட்டாலும் இந்த வைரஸ் சில ஆய்வகங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் ஏசியாவில் இவை உள்ளன. புதிய தலைமுறை தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு வருகின்றன. சின்னம்மைக்கான விரைவான கண்டறிதல் முறைகளும் கண்டறியப்பட்டு வருகின்றன.

குரங்கு அம்மை

குரங்கு அம்மை வைரஸ் முதன்முதலில் 1958-ல் டென்மார்க்கில் சிறைபிடிக்கப்பட்ட குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இதற்கு அந்தப் பெயர் வந்தது. குரங்கு அம்மை (Monkey Pox) என்ற பெயர் இருந்தாலும், இந்த வைரஸ் இயற்கையில் முதன்மையாக எலிகள் மற்றும் மரக்குறிஞ்சிகள் (rope squirrels) போன்ற சிறு பாலூட்டிகளில் தான் அதிகம் காணப்படுகிறது.

மனிதர்களில் பரவல்

மனிதர்களில் குரங்கு அம்மை 1970-ல் காங்கோவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. பெரும்பாலும் இது குழந்தைகளில் காணப்படுகிறது. சின்னம்மையை போலவே தோல் புண்கள், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும், குரங்கு அம்மையில் கழுத்து பகுதியில் வீக்கம் (lymphadenopathy) அதிகமாக காணப்படுகிறது.இந்த நோய் தொற்றுக்குள்ளான விலங்குகளின் காயங்களைத் தொடுதல் அல்லது நோய் தொற்றுக்குள்ளான நபரிடம் நெருக்கமான தொடர்பின் மூலம் பரவுகிறது. தொற்றுக்குள்ளானவர்களுடன் ஒரே வீட்டில் , தடுப்பூசி போடாமல் வாழும் நபர்களுக்கு சுமார் 9% பரவல் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் குரங்கு அம்மை 2022-ஆம் ஆண்டில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. கேரளாவில் தான் முதல் நோயாளி உறுதிப்படுத்தப்பட்டார். இவர் விலங்குகளுடன் தொடர்பு இல்லாமல், அரேபிய நாடுகளில் இருந்து பயணித்தவர் என்பதாலேயே, இது வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தொற்றாகக் கருதப்பட்டது.இப்பொழுதும் கூட காங்கோ மற்றும் மேற்குப் ஆப்பிரிக்க நாடுகளில் இந்நாள் பெரிய சிக்கலாக தொடர்கிறது.

நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு

குரங்கம்மை கண்டறிதல் இப்போது PCR, வைரஸ் கல்ச்சர் மற்றும் சீராலஜி வழியாக சுலபமாகிவிட்டது. தடுப்பூசி (vaccinia) சுமார் 85% பாதுகாப்பளிக்கிறது. புதிய தடுப்பூசிகள் மற்றும் நோய் பாதுகாப்பு நெறிமுறைகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த முயற்சி நடக்கிறது.குரங்கு அம்மை மற்றும் சின்னம்மை இரண்டும் ஒரே வகை ஒர்தோபாக்ஸ் (Orthopoxvirus) குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால் சின்னம்மை ஒப்பிடும்போது, குரங்கு அம்மை தொற்று பரவல் திறன் குறைவாக உள்ளது – அதாவது இது எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை. இதனால்தான், இது பெரிய அளவிலான மரணங்களை ஏற்படுத்தாமல் இருக்கிறது.

பிர்மிங்காம் சின்னம்மை விபத்து!

1978ல் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் ஆய்வகம் பாதுகாப்பு குறைவால், ஜனட் பார்க்கர் என்ற நபருக்கு சின்னம்மை தொற்று ஏற்பட்டது. அவர் சில நாட்களில் உயிர் இழந்தார். இதுவே உலகின் கடைசி சின்னம்மை மரணமாகும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi