வாஷிங்டன்: குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனாவைப் போல 2022 முதல் பரவத் தொடங்கிய இந்த நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளன.