கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் குணா குகைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் வந்துள்ளனர். அங்கிருந்த குரங்குகளுக்கு நொறுக்குத்தீனி கொடுத்து விளையாடியுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவரிடமிருந்து, அவர் அசந்த நேரத்தில் 500 ரூபாய் கட்டை அப்படியே ஒரு குரங்கு பறித்துச் சென்று விட்டது.
அங்கிருந்தவர்கள் விரட்டவும், அக்குரங்கு அருகில் இருந்த மரத்தில் விறுவிறுவென ஏறி, உச்சிக்குச் சென்று விட்டது. அங்கு மரக்கிளையில் வசதியாக உட்கார்ந்தபடி அந்த 500 ரூபாய் கட்டில் இருந்து ஒவ்வொரு நோட்டாக உருவி கீழே வீசத் துவங்கியது. இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.குரங்கு வீசிய நோட்டுகளை, மரத்திற்கு கீழே நின்றபடி அந்த சுற்றுலாப் பயணி ஒவ்வொன்றாக எடுத்ததாகவும் கூறப்படுகிறது.