சென்னை: குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட்டில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை (Mpox) என்பது ஒரு வைரஸ் சோனோடிக் நோயாகும். தென்னாப்பிரிக்கா, கென்யா, ருவாண்டா, உகாண்டா, காங்கோ, ஜனநாயக குடியரசு, புருண்டி, கேமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் Mpox நோய் பதிவாகியுள்ளன. இதுவரை 120 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது
உலக சுகாதார அமைப்பினர் அறிக்கையின்படி, ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை ஒரு இலட்சம் நோயாளிகளுக்கு நோய்கள் கண்டறியப்பட்டு மற்றும் 220 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 33,556 நோயாளிகள், பிரேசிலில் 11,841 நோயாளிகளும், ஸ்பெயினில் 8104 நோயாளிகளும், டெமாகிரடிக் ரிபப்ளிக் ஆப் காங்கோவில் 4385 நோயாளிகளும், பிரான்சில் 4283 நோயாளிகளும், கொலம்பியாவில் 4286 நோயாளிகளும், யுனைடெட் கிங்டம் 4018 நோயாளிகளும், பெருவில் 3939 நோயாளிகளும், ஜெர்மனியில் 3886 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர்.
Mpox பொதுவாக மருத்துவ ரீதியாக சொறி, காய்ச்சல் மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை தொற்றால் பொது சுகாதார அவசர நிலையாக (Public Health Emergency of International Concern), 14.08.2024 அன்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 4 பன்னாட்டு விமான நிலையங்களில் சராசரியாக 58 லிருந்து 64 வரை பன்னாட்டு விமானங்கள் வருகின்றது.
இதில் மொத்தமாக 11,850 சர்வதேச பயணிகள் சராசரியாக வருகை புரிகின்றனர். அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை குறித்த திரையிடல் (Screening) செய்யப்படுகிறது.சென்னை விமான நிலையத்தில் சராசரியாக 40லிருந்து 45 வரை பன்னாட்டு விமானங்கள் வருகின்றது. இதில் மொத்தமாக 9000 சர்வதேச பயணிகள் சராசரியாக வருகை புரிகின்றனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சராசரியாக 12 முதல் 13 வரை பன்னாட்டு விமானங்கள் வருகின்றது. இதுவரை திருச்சி விமான நிலையத்தில் 192 பன்னாட்டு விமானங்கள் வந்துள்ளது.
இதில் மொத்தமாக இதுவரை 27,706 சர்வதேச பயணிகள் திரையிடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தினசரி சிங்கப்பூர், கொலம்போ மற்றும் வாரந்தோறும் அபுதாபி, துபாய் மற்றும் ஜார்ஜா ஆகிய நாடுகளிலிருந்து சர்வதேச பயணிகள் திருச்சிக்கு வருகை புரிகின்றனர். கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் சராசரியாக 2 முதல் 3 வரை பன்னாட்டு விமானங்கள் வருகின்றது. இதில் சராசரியாக 500 பயனாளிகள் வருகை புரிகின்றனர். மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் சராசரியாக 3 பன்னாட்டு விமானங்கள் வருகின்றது. இதில் சராசரியாக 450 பயனாளிகள் வருகை புரிகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை கண்டறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை.
வழிகாட்டு நெறிமுறைகள்:
*குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்
*பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன
*பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
*மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற உத்தரவு
*இது வைரஸ் தொற்று என்பதால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாகத் தொடங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது
*இத்தகைய அறிகுறியுடன் வரக்கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க உத்தரவு