மும்பை: பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தற்போது அந்த சட்டம் தன்னையே பதம் பார்த்துள்ளதாக சரத்பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) தலைவர் சரத் பவார் அளித்த பேட்டி ஒன்றில், ‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) திருத்தங்கள் குறித்து எச்சரித்தேன். ஒன்றிய அமைச்சர் என்ற அடிப்படையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினேன்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்மொழிந்த இந்த திருத்தங்கள், எதிர்க்கட்சிகளை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படலாம் என்று எச்சரித்தேன். ஆனால், என்னுடைய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது. இப்போது இந்தச் சட்டம் எனக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து தற்போது எழுந்துள்ள விவாதங்கள், நான் ஏற்கனவே சொன்ன எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களை அரசியல் உள்நோக்கத்துடன் ஒடுக்குவதற்கு இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய அரசியலில் நியாயமான மற்றும் வெளிப்படையான சட்டங்கள் அவசியம்’ என்று கூறினார்.
பணமோசடி தடுப்புச் சட்டமானது கடந்த 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பண மோசடி மற்றும் நிதி குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அமலாக்கத்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் டிஜிட்டல் சாட்சியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்டவரின் செல்போன், லேப்டாப் மற்றும் டிஜிட்டல் சாட்சியங்களை சீல் வைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் சோதனை மற்றும் கைது நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன சந்தேகத்திற்கிடமான நபர்களை விரைவாகக் கைது செய்யவும், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பண மோசடி குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது; குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் அரசியல் எதிரிகள் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.