புதுடெல்லி: கடந்த 2019ம் ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமோசடி தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் செல்லும் என கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், ஜி.பிரசாந்த் ராஜு உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை முன்னதாக பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பும் இந்த விவகாரத்தில் வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை அடிப்படையாக கொண்டு தான் விசாரணை நடத்துவது குறித்து திட்டமிட முடியும் என்று கடந்த மாதம் 7ம் தேதி தெரிவித்திருந்தது.இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள், வரும் 18ம் தேதி பட்டியலிட்டு வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.