‘‘இலைத்தலையின் கலக்கத்துக்கு காரணம் என்ன…’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மம்மி மறைவுக்கு பிறகு சிஎம் ஆகிடலாமுன்னு போட்டோ சூட் நடத்தி உடைகளை மாற்றி தயாராக இருந்த சின்னமம்மி, திடீரென ஜெயிலுக்கு போயிட்டாங்க. கூவத்தூரில் லக்கி பிரைசாக இலைக்கட்சி தலைவராக இருக்கக்கூடிய சேலத்துக்காரருக்கு சிஎம் போஸ்ட் கிடைச்சது. அப்போது எம்எல்ஏக்களுக்கெல்லாம் ரொக்கமும், தங்க நகைகளும் கொட்டிக்கொடுத்ததாக கட்சிக்காரங்களே இன்னும் பேசிக்கிறாங்க. அதோடு மாதம்தோறும் பல லட்சங்கள் சம்பளம் இல்லாமல் கிம்பளமாக கொடுத்து நாலரை ஆண்டுகளை ஆட்சி நடத்தியவரு தான் இலைக்கட்சி தலைவருன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சா இருக்குது.
இந்த காலக்கட்டத்தில் எதிர்காலத்தை மனதில் வைத்து பல ஆயிரம் கோடிகளை ஆங்காங்கே கொடுத்து பதுக்கி வச்சதாக பரவலாக கட்சிக்காரங்க சொல்றாங்க. இன்னும் ஓராண்டில் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரப்போகுதாம். இத்தேர்தலில் ஜெயிச்சிடனுமுன்னு இலைக்கட்சி தலைவர் திட்டம் போட்டுள்ளாராம். இதற்காக மலராத கட்சியுடன் சேர்ந்திருப்பதால் பணத்திற்கு பஞ்சமே இருக்காதுன்னு நினைக்கிறாராம். என்றாலும் இலைக்கட்சியிடம் இருந்து துட்டு வாங்குவது என்பது அக்கட்சியின் கூட்டணி கட்சிகளுக்கு எப்போதும் சந்தோசம் தானாம்.
எனவே இலைக்கட்சி தலைவர் பதுக்கி வைத்திருப்பதை தூசி தட்டிக்கிட்டு வாறாராம். ஆனால் அவருக்கே அல்வா கொடுக்கும் வேலையும் நடந்துக்கிட்டிருப்பதை நினைச்சி ரொம்பவே ஷாக்காயிருக்காராம். பாதிக்கு பாதியான பினாமிகள் பணத்தை ரிட்டன் கொடுத்திட்டாங்களாம். பாதிபேர் மண்டையை சொரியுறாங்களாம். எப்படியும் தேர்தலில் ஜெயிக்க முடியாது. இதனால பணம் இல்லைன்னு சொல்லிடலாம் என்கிற எண்ணத்தில் இருக்காங்களாம். இதனால இந்த பினாமிகள் கிட்ட இருந்து பணத்தை கிளப்ப முடியுமான்ற கலக்கத்துல இருக்காராம் இலைத்தலைவரு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்காமலேயே ஆலோசனை கூட்டம் நடத்துனா குழப்பம் ஏற்படுத்தும் முயற்சிதானே என இலைக்கட்சியில் கேள்வி மேல் கேள்வி எழுப்புறாங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியில் அண்மையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டதாம்.. இதில் முன்னாள் அமைச்சர் லட்சுமியானவர் கலந்துகொண்டு பூத் கமிட்டியினரிடம் ஆலோசனை நடத்தினாராம்.. ஆனால் இந்த கூட்டத்திற்கு கட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லையாம்.. மாநகர பகுதியில் உள்ள நிர்வாகிகளுக்கே முறையாக அழைப்புவரவில்லை, இதனால் கூட்டத்தில் பலர் கலந்துகொள்ளவில்லையென புகைச்சல் ஏற்பட்டிருக்குதாம்.. சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கூட்டங்களை நடத்தாமல் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்வது ஏன் என்று இலை கட்சியின் நிர்வாகிகளிடம் இருந்தும் கேள்விகள் எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தூக்கி அடிக்கப்பட்ட அதிகாரி கவர்னர் மாளிகைக்கு வந்த பிறகு புல்லட்சாமியை டென்ஷனாக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி நிர்வாகிக்கும்- புல்லட்சாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருது.. இதற்கெல்லாம் மூலக்காரணம் நிர்வாகிக்கு நெருக்கமான பெல் அதிகாரியின் செயல்பாடுதானாம்.. தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்று நாடாளுமன்ற தேர்தலின்போது, பெல் அதிகாரியை புல்லட்சாமி காரைக்காலுக்கு தூக்கி அடித்தாராம்.. அந்த அதிகாரியைதான் மாநில நிர்வாகி தன்னுடைய செயலராக்கி இருக்கிறாராம்.. இது புல்லட்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.. இந்நிலையில் கவர்னர் மாளிகைக்கு பெல் அதிகாரி வந்த பிறகு, புல்லட்சாமியை டென்ஷனாக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறாராம்.. நிர்வாகியின் ஒப்புதலுக்கு வரும் சில கோப்புகளை திருப்பி அனுப்புவது, முக்கிய கோப்பை அங்கேயே முடக்கி வைப்பதுமாக இருக்கிறாராம்.. இதற்கு மாநில நிர்வாகியும் முழு ஆதரவாம்.. தற்போது நடந்து வரும் சித்து விளையாட்டுகளுக்கு பெல் அதிகாரிதான் காரணமாக இருக்கிறார். அவரை அழைத்து பேசினால் பிரச்னை தீரும் என்று புல்லட் சாமியிடம் மற்ற அதிகாரிகள் கூறியிருக்கிறாங்க.. ஆனால், புல்லட்சாமியோ பெல் அதிகாரியின் பெயரை கேட்டவுடன் டென்ஷன் ஆகி விடுகிறாராம்.. இதனால் கடந்த சில வாரங்களாக எதுவும் செய்ய முடியாத விரக்தியில் தக்க சமயத்தை எதிர்பார்த்து புல்லட்சாமி மவுனம் காத்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தம்பிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எனக்கும் தந்தே ஆகவேண்டும் என அடம் பிடிக்கிறாராமே அக்கா தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் மலராத கட்சியின் மாஜி தலைவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் போட்டியிட்டு மண்ணை கவ்வியதால் இனி அங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை உறுதி செய்த பின் சமீபத்தில் மான்செஸ்டர் நகருக்கு குடியேறி விட்டார்.. மாஜி தலைவரின் மான்செஸ்டர் வருகை தேசிய பொறுப்பில் இருக்கும் அக்காவிற்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறதாம்.. மான்செஸ்டர் நகரில் மலராத கட்சியின் அடையாளம் என்றால் நான் மட்டும்தான் இருக்கணும்.. என்னை தாண்டி வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் அக்கா உறுதியாக இருக்கிறாராம்.. அதிலும் தம்பி எக்காரணம் கொண்டும் வளர்ந்து விடக்கூடாது. வளரவும் விடமாட்டேன்னு தன்னோட நெருங்கிய ஆதரவாளர்களிடம் அக்கா சவால் விட்டு வருகிறாராம்.. வரும் எலக்சனில் மான்செஸ்டர் நகரில் மாஜி தலைவரான தம்பி போட்டியிடலாம் என்ற தகவலை கேட்டு அதிர்ந்த அக்கா, கட்சியிலும், மக்களிடமும் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய ஆசைப்படுகிறாராம்.. அதனால், தம்பிக்கு தரும் முக்கியத்துவத்தை, எந்த வகையிலும் குறையாத வகையில் தனக்கும் தர வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் அக்கா அடம் பிடிக்கிறாராம்.. தற்போது பொறுப்பில் இல்லாத தம்பிக்கு அளிக்கும் மரியாதையை, தேசிய அளவில் பொறுப்பில் இருக்கும் எனக்கு ஏன் தருவதில்லைனு எனக் கேட்டு கட்சிக்காரர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறாராம்.. தம்பிக்கும், அக்காவிற்கும் அடுத்தடுத்து வந்த பிறந்த நாளை அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக மான்செஸ்டர் நகரில் கொண்டாடினார்களாம்.. இதுவரை இல்லாத வகையில் அக்காவின் பிறந்த நாளின் போது, கோயில்களில் பூஜை, நலத்திட்ட உதவிகள் வழங்கல் எல்லாமே கட்சியினர் செய்தது அக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கதானாம்.. தேர்தல் நெருங்க, நெருக்க அக்கா- தம்பி மோதல் மேலும் அதிகரிக்கும்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
பதுக்கி வச்ச பணத்தை தராம பினாமிகள் இழுத்தடிப்பதால் கலங்கியிருக்கும் இலைத் தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0