புதுடெல்லி: உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன் என்று நாடாளுமன்ற குழு கேள்வி எழுப்பி உள்ளது. டெல்லியில் நேற்று பணியாளர் நலத்துறை, பொது குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்நீதித்துறை நீதிபதிகளுக்கான நடத்தை விதிகள் மற்றும் நீதிபதிகளால் ஓய்வுக்கு பின் பணிகளை மேற்கொள்வது தொடர்பான நீதித்துறை செயல்முறைகள் மற்றும் அவற்றின் சீர்திருத்தம் என்ற தலைப்பில் நீதித்துறை செயலாளர் விளக்கக்காட்சியை வழங்கினார்.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து எம்பிக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். சம்பந்தப்பட்ட நீதிபதியை நீக்குவதற்கான எந்த தீர்மானமும் இதுவரை ஏன் கொண்டுவரப்படவில்லை என்றும், நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்படாதது ஏன்? என்றும் எம்பிக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளையும், உயர்நீதித்துறையில் உள்ள நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகள் வரை அரசு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் எம்பிக்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு நீதிபதி வர்மா வீட்டில் பணத்தை மீட்டது உண்மை என்று கண்டறிந்த பின்னரும் நீதிபதியை நீக்குவதற்கான ஒரு தீர்மானத்தை அரசு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
நீதிபதி யாதவை நீக்க கோரும் எம்பிக்கள் கையொப்பம் சரிபார்ப்பு
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவின் வெறுப்பு பேச்சு தொடர்பாக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வரக்கோரும் நோட்டீசில் 55 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் எம்பி சர்பராஸ் அகமதுவின் கையெழுத்து இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கையெழுத்து போலியானதா என்பது குறித்து மாநிலங்களவை செயலகம் சரிபார்த்து வருகின்றது. இதுவரை 44 எம்பிக்களின் கையெழுத்துக்களை மாநிலங்களவை செயலகம் சரிபார்த்துள்ளது. கபில் சிபல் மற்றும் ஒன்பது எம்பிக்கள் இன்னும் தங்களது கையெழுத்தை சரிபார்க்கவில்லை.