நன்றி குங்குமம் தோழி
ரேசன் கடையில் கூட்டம் அலைமோதியது, அன்று மண்ணெண்ணெய் போடுகிறார்கள். ஆண்கள் வரிசையை விட பெண்கள் வரிசை நீண்டிருந்தது. பெண்கள் வரிசையில் மாலினி கையில் கேனுடன் நின்று கொண்டிருந்தாள். ஆண்கள் வரிசையில் நின்ற பாலு மாலினியை பார்த்தவன், அவளிடம் உள்ள ரேசன் கார்டை வாங்கியவன், ‘‘நீ போய் அந்த மரத்தடியில் நில்லு. நான் போய் பில் வாங்கி வருகிறேன்’’ என்றான்.பணத்தை நீட்டினாள். அதை நீயே வச்சுக்க என்றபடி வரிசையில் நின்றபடி முன்னேறினான். மாலினி பக்கத்தில் உள்ள மர நிழலில் நின்றாள். இவளைப் போலவே இன்னும் சிலரும் நின்றிருந்தார்கள்.
பில் வாங்கிய பாலு மாலினியிடம் இருந்த கேனை வாங்கி மண்ணெண்ணெய் போடும் இடத்தில் நின்ற வரிசையில் நின்று தனக்கும், மாலினிக்கும் எண்ணெய் வாங்கி வந்து கார்டையும் கேனையும் அவளிடம் கொடுத்தான். ரொம்ப நன்றி அத்தான் என்றாள். “உன் நன்றியை போய் குப்பையில் போடு. நீ ஏன் ரேசனுக்கு வந்தே? அத்தையால் வரமுடியலையா? வரிசையில் நின்றிருந்த கேசவன் உன்னை என்னமா மொறைச்ச மொறைச்சி பார்த்தான் தெரியுமா?” என்றான்.சிரித்த அவள், ‘‘என் கழுத்தில் தாலியைக்கட்டு. அப்புறம் ஒரு பய என்னை முறைச்சுப் பார்ப்பானா? பார்த்தாலும் நான் சும்மாவிட்டுவிடுவேனா?’’ என்றாள்.
‘‘சரி சரி… நான் அத்தையை கேட்டதா சொல்லு. அப்பறம் நான் வீட்டுக்கு வர்றேன். இன்னும் ஒரு வாரத்தில் நான் வெளிநாடு போகிறேன். அங்கே நானும் அப்பா நண்பர் ஒருவரும் சேர்ந்து தொழில் தொடங்கப் போகிறோம். 2 வருடம் கழித்துதான் வருவேன். வந்தவுடன் உன் கழுத்தில் தாலி கட்டுவதுதான் என் முதல் வேலை. சரி வரட்டுமா? முடிஞ்சா சாயங்காலம் 6 மணிக்கு நாகேஸ்வரன் கோவிலுக்கு வா. அம்மா துர்க்கைக்கு அர்ச்சனை செய்ய சொன்னாங்க. நான் மட்டும்தான் வருவேன்.’’“நீ அத்தைக்கிட்ேட சொல்லி விட்டே வா. இல்லைன்னா அத்தையையும் அழைத்துக் கிட்டே வா” என்றான். சரி என அவள் வீட்டை நோக்கி நடந்தாள்.
மாலினியின் அம்மா விஜயா, பாலுவின் அப்பாவின் 2வது தங்கை. இவள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதினால் உறவுகள் யாரும் அவளுடன் ஒட்டுதலாக இல்லை.பாலுவின் அம்மாவும், அப்பாவும் விஜயாவைப் பார்த்தால் பேசுவது கூட கிடையாது. மாலினியின் அப்பா சில வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் காலமானார்.மாலினி 8ம் வகுப்பு வரை படித்தவள். மேற்கொண்டு படிக்கவில்லை. தையல் கத்துக் கொண்டவள் வீட்டின் திண்ணையிலேயே தையல் கடை வைத்து நடத்தி வருகிறாள்.
கொஞ்சம் நிலமும், 10 தென்னை மரம் கொண்ட தோப்பும் இருக்கு. இந்த வீடும் அவர்களுக்கு சொந்தம். அவள் கணவர் வைத்துவிட்டு சென்ற ஆஸ்தி இது. அதனால் எவ்வித கஷ்டமும் கவலையுமில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.மாலை மாலினியும், அவள் அம்மாவும் கோவிலுக்கு வந்தனர். சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து முடித்தபின் பிரகார ஓரத்தில் மூவரும் அமர்ந்தனர்.
“ஏம்ப்பா, நீ வெளிநாட்டுக்குப் போறீயாமே?” என்றாள் அத்தை. “ஆமாம் அத்தை. அங்கே போய் நல்லா சம்பாதித்து வந்தா நானே உங்கப் பொண்ணுக்கு நகையும், நட்டும் செய்து பட்டுப்புடவையா வாங்கி குவிக்க முடியும்.”மாலினி சிரித்தபடியே அமர்ந்திருந்தாள்.
‘‘தம்பி நீயும் மாலினியும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆசைப்படுறீங்க. ஆனா, அண்ணனும் அண்ணியும்’’ என இழுத்தாள்.“அத்தை, அதைப்பற்றி நீங்க கவலைப்படாதீங்க. யார் எதிர்த்தாலும் மாலினிதான் என் மனைவி. 2 வருடம் பொறுத்துக்குங்க. நான் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மற்றதை பேசிக்கலாம்” என்றான்.“ஏம்ப்பா வெளிநாடு போகாம இங்கேயே ஏதாவது வேலை பார்க்கக்கூடாதா? உங்களுக்கு நிலம் நீச்சு தோப்பு துரவு எல்லாம் இருக்கே. இதைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே.”‘‘என் அம்மா சொன்னது போலவே நீங்களும் சொல்றீங்க. இங்கே 10 வருஷம் சம்பாதிப்பதை அங்கே 2 வருடத்திலே சம்பாதித்து விடலாம் அத்தை. உங்கப் பொண்ணு மாடி வீட்டிலே மகாராணி போல் வாழ வேண்டாமா? எனக்கு ஆசீர்வாதம் செய்யுங்க அத்தை’’ என வணங்கினான்.
“மாலினி நான் வெளிநாடு போனவுடன் தபால் போடுகிறேன். நீ பதில் போடு… அப்புறம் உனக்கு வேணுங்கிறதை நான் வாங்கி அனுப்புகிறேன்” என்றான். அவள் கண்கள் கலங்கின.
ஆயிற்று அவனும் வெளிநாடு சென்று 1 வருடம் ஆகிறது. மாலினிக்கு அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். அவளும் பதில் எழுதிக் கொண்டிருந்தாள். தொழில் விஷயமாக அடிக்கடி வெளியிடங்களுக்கு அலைய வேண்டி இருப்பதால் உடனுக்குடன் பதில் போடவில்லை என வருந்தாதே என ஒரு தபாலில் குறிப்பிட்டிருந்தான்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பாலுவும் அவன் கூட்டாளியும் தொழிலில் சக்கைப் போடு போடுவதாகவும் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். அவன் பெற்றோர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனும் தந்தை பெயருக்கு மாதா மாதம் ஒரு பெரும் தொகை பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அதை அவன் பேரிலேயே போட்டு வந்தார் அவன் தந்தை.
பாலு அப்பாவின் முதல் தங்கை கொஞ்சம் வசதியான இடத்தில் வாக்கப்பட்டவள். ஒரு மகன், ஒரு மகள். மகன் திருமணம் ஆகி திருச்சியில் மாமனாரின் தொழிலை கவனித்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டான். அடுத்த மகளைத்தான் தன் அண்ணன் மகன் பாலுவுக்கு கொடுக்க வேண்டும் என அவளும் அவள் கணவரும் திட்டம் போட்டனர்.
பாலுவின் அப்பா சுப்பையா வீட்டிற்கு திடீர் விஜயம் செய்தனர். அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார். ‘‘என்ன மச்சான் உங்க பையன் வெளிநாட்டில் நல்லா சம்பாதிப்பதாக கேள்விப்பட்டேன்.’’“என் மகன் மணமாகி திருச்சியில் செட்டிலாகிவிட்டது உங்களுக்கு தெரியும். அடுத்த என் மகளை நம்ம பாலுவுக்கே கொடுக்கலாம் என நானும் உங்க தங்கையும் அபிப்பிராயப்படுகிறோம்.”‘‘ஆமாம். சொந்தம் விட்டுப் போகக்கூடாது அண்ணா. என் மகளைத்தான் உங்களுக்கு தெரியுமே. நல்லா படிச்சிருக்கா, அழகாகவும் இருக்கா. பாலு திருமணத்திற்கு நீ வேறு ஏதாவது ஏற்பாடு செய்வதற்கு முன்பே சொல்லி வைப்போம் எனதான் வந்தோம் என சொல்லிச் சென்றனர்.
மறு வாரம் பாலு அம்மாவின் தம்பி அவர் மனைவியுடன் சுப்பையா வீட்டிற்கு வந்தார்கள். நலம் விசாரித்து முடித்தபின் பேச்சை ஆரம்பித்தனர்.‘‘அக்கா, உன் பையன் பாலுவுக்கு நம்ம பொண்ணைத்தான் கொடுக்கணும் என இவ ஒத்தைக் கால்லே நிக்கிறா. மூத்தப் பெண்ணுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டது. இவள் இளையவள். உனக்குத்தான் தெரியுமே. அவள் நல்ல அழகு. நம்ம பாலுவுக்கு பொருத்தமான ஜோடி. மச்சானும் நீயும்தான் உங்க முடிவை சொல்லணும்.’’‘‘பாலு வர இன்னும் ஒரு வருடம் இருக்கு. அதற்கு இப்ப என்ன அவசரம்’’ என்றார் சுப்பையா. ‘‘இல்லே மச்சான்… உறுதியாயிட்டா நாம் வேற ஜோலியை நிம்மதியா கவனிக்கலாம். நீங்களும் பாலுவுக்கு வேறு ஏதாவது ஏற்பாடு செய்யாமல் இருக்கலாம் அதற்குதான்.’’
அதற்கு பிடி கொடுக்காமல் ‘‘பாலு வரட்டும். அவன் கருத்தையும் கேட்போம். அப்புறம் முடிவு எடுக்கலாம். அவன் வந்தவுடன் சொல்லி அனுப்புகிறோம் வாங்க. அப்ப பேசிக்கலாம். இப்ப நாமளா எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’’ என சொல்லியனுப்பினார். ‘‘என் அக்கா சொல்படிதான் பாலு நடப்பான். கவலைப்படாதே’’ என இருவரும் கிளம்பினர். 6 மாதம் சென்றிருக்கும்.வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சொன்ன சேதி அவ்வளவு நல்லதாக இல்லை. பாலு கூட்டு சேர்ந்து செய்த தொழிலில் ஏக நஷ்டம் அடைந்துவிட்டதாகவும், பாலுவின் கூட்டாளி அவனை ஏமாற்றி மோசம் செய்து விட்டதாகவும் இவனே பணம் கட்டினால்தான் இந்தியா திரும்ப முடியும் என்று கூறினர்.பாலுவின் அம்மாவும்-அப்பாவும் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘முதல்ல பாலுவை ஊருக்கு வரச்சொல்லுங்க. இல்லேன்னா சொல்லுங்க நான் போன் பண்றேன்.’’
‘‘அவன் வெகுளி. அவனை ஏமாத்தினவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க. இங்கேயே நம்ம விவசாயத்தைப் பார்க்கட்டும். இல்லேன்னா நீங்க ஏதாவது தொழில் வச்சுக் கொடுங்க’’ என புலம்ப ஆரம்பித்தாள் பாலுவின் அம்மா.அடுத்த வாரமே சுப்பையாவின் முதல் தங்கை வந்தாள். அண்ணா பாலு தொழிலில் ெபரிய நஷ்டமாமே. கவலைப்படாதே. அவனை இங்கேயே விவசாயத்தை பார்த்துக் கொள்ளச் சொல். என் பொண்ணுக்கு ஒரு பெரிய இடத்தில் இருந்து மாப்பிள்ளை வந்திருக்கு. இனி பாலுவை நம்பி பிரயோஜனம் இல்லே.
அதான் அந்த வரனுக்கே முடிச்சிடலாம்னு இருக்கோம். உன் கிட்டேயும் அண்ணி கிட்டேயும் சொல்லிட்டு போவோம்ன்னு வந்தோம். அவுங்களாலையும் அலைய முடியவில்லை. பையன் கல்யாணத்தன்றுதான் வருவான். அதனால் நேரில் வந்து பத்திரிகை கொடுக்கலேன்னு வருத்தப்படாதே அண்ணா. பத்திரிகை தபால்லே அனுப்புறோம். 2 பேரும் வாங்க’’ என சொல்லிச் சென்றனர். சுப்பையா சிலையாக அமர்ந்திருந்தார்.
ஒரு வாரம் கழித்து பாலுவின் மாமாவும்(அம்மாவின் தம்பி) அவரின் மனைவியும் வந்தனர். ‘‘என் பொண்ணு யாரையோ காதலிக்கிறாளாம். அவனுக்கே கல்யாணம் செய்ய இருக்கோம். பத்திரிகை எல்லாம் அடிக்கலே. ரொம்ப முக்கிய சொந்தங்களுக்கு போனிலேயே சொல்வதா இருக்கோம். நான் போன் செய்கிறேன். கல்யாணத்திற்கு நீங்களும், அக்காவும் கண்டிப்பா வாங்க மச்சான். மனசிலே எதுவும் வச்சுக்காதீங்க. பாலுவுக்கு வேறு நல்ல வரன் அமைஞ்சா நானே வந்து சொல்றேன்’’ எனச் சொல்லி சென்றனர்.
சுப்பையாவும் அவர் மனைவியும் சிலையாக அமர்ந்திருந்தனர். 10 நாள் சென்றிருக்கும். பாலுவின் 2வது அத்தையும், அவர் மகள் மாலினியும் கையில் ஒரு மஞ்சள் பையுடன் சுப்பையா வீட்டிற்கு வந்தனர். சுப்பையாவும் அவர் மனைவியும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர்.“நான் உள்ளே வரலாமா அண்ணா?” என்றபடியே உள்ளே வந்தனர் மாலினியும் அவள் அம்மாவும்.“வாம்மா வா! உன் மேல் இருந்த கோபம் எல்லாம் போய் ரொம்ப நாளாச்சும்மா. நான் எப்படி உன் வீடு தேடி வந்து பேசறது என ஒரு வறட்டு கௌரவத்தால்தான் வரவில்லை. வா. உட்கார். வராதவங்க வந்திருக்காங்க.
2 பேருக்கும் போய் காபி கொண்டு வா. இப்படி உட்காருங்கள்” என பக்கத்தில் உள்ள பெஞ்சை கை காட்டினார்.“பரவாயில்லை மாமா… நீங்கள் இவ்வளவு தூரம் எங்களை மதித்து பேசுனதே அதிகம்” என்றாள் மாலினி. அவள் அம்மா தன் கையில் இருந்த பையில் இருந்து எடுத்த பத்திரங்களை அவள் அண்ணன் கையில் கொடுத்தாள்.
“அண்ணா! இதில் என் வீட்டுப் பத்திரம், தென்னந்தோப்பு பத்திரம் எல்லாம் இருக்கு. இதை அடகு வச்சோ, வித்தோ பணத்தை கட்டி விட்டு பாலுவை இங்கே வரவழைச்சுடு அண்ணா” என்றாள்.சுப்பையா பத்திரத்தை எல்லாம் அவள் கையில் கொடுத்து, ‘‘பத்திரமா வச்சுக்கம்மா’’ என்றார். சிரித்தபடி காப்பி கொண்டு வந்த அவர் மனைவி, “போதுங்க உங்க விளையாட்டு. உங்க தங்கச்சியை ரொம்ப சோதிக்காதீங்க” என்றாள் அவர் மனைவி.மாலினியும்-அவள் அம்மாவும் ஒன்றும் புரியாமல் திகைத்தபடி நின்றனர். உடனே சுப்பையா, ‘‘தங்கச்சி, பாலுவும்-மாலினியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்கன்னு எங்களுக்குத் தெரியும். உன் அக்காவைப் பத்திதான் உனக்குத் தெரியுமே. காசிலேயே குறி. இவள் தம்பியைப் பற்றியும் எங்களுக்குத் தெரியும்.
எல்லா உறவும் பாசம்-அன்பு என்பதை விட பணத்தை பெரிசா மதிக்கிறவங்க. அவுங்க மனம் கோணாமல் அவங்களை கழட்டிவிட பாலு உள்பட நாங்கள் போட்ட திட்டம்தான் இது. என் மகன் தொழிலில் நஷ்டம் அடையவும் இல்லை. அவனை யாரும் ஏமாத்தவும் இல்லை. பணத்தை பெரிசா நினைத்த அந்த உறவினர்கள் பெண்களுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.இன்னும் 1 மாதத்தில் பாலு வந்து விடுவான். வந்தவுடன் அடுத்த முகூர்த்தத்திலேயே பாலு-மாலினி திருமணம்தான். சந்தோஷம்தானே தங்கச்சி. மாலினியின் முகத்தில் இப்பவே வெட்கம் வந்திடுச்சு’’ என்றார்.
‘‘வாங்க சம்பந்தியம்மா… மருமகளே உங்க எல்லோருக்கும் நம்ம வீட்டிலேதான் இன்று விருந்து’’ என்றாள் பாலுவின் அம்மா.சிரித்தபடியே அவர்கள் மூவரும் சமையலறையை நோக்கி போவதை வேடிக்கை பார்த்தபடியே சுப்பையா அமர்ந்திருந்தார்.
தொகுப்பு: எஸ். மணிமேகலை