Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை மோனாலிசாவுக்கு வழங்கிய பாதுகாப்பு ரத்து: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம் புகழ் பெற்ற மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த மோனாலிசா கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து பர்மான் கான் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு மோனாலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது மகளுக்கு 16 வயது மட்டுமே ஆகியுள்ளதால் அவரை திருமணம் செய்த பர்மான் கான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மோனாலிசாவின் தந்தை மத்தியபிரதேச மாநில போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கும், கணவன் பர்மான் கானுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கூறி மோனாலிசா கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஜூன் 19ம் தேதி இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவருக்கும் பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் கேரள அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மோனாலிசாவும், அவரது கணவரும் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாததால் இருவருக்கும் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், மோனாலிசாவுக்கும், அவரது கணவருக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. மேலும் பாதுகாப்பு கோரி எழுத்துபூர்வமாக விண்ணப்பித்தால் அவருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.