நன்றி குங்குமம் தோழி
கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு திருநங்கையின் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.திருநங்கையான ஜா மற்றும் அருண் தம்பதியினர் 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஸ்ரீஜா திருநங்கை என்பதால், சட்டப்பூர்வமாக அவர்களின் திருமண பதிவு நிராகரிக்கப்பட்டது. தங்களது திருமணம் சட்டப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஸ்ரீஜா மற்றும் அருண் ஆகியோர் போராடினர். இவர்களுடன் இணைந்து ஸ்ரீஜாவின் தாய் வள்ளியும் தன் மகளுக்காக போராடினார். இதன் பலனாகவே 2019ம் ஆண்டு ஸ்ரீஜா மற்றும் அருண் ஆகியோரின் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இதுவே தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை திருமணம். இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா-அருண் நடத்திய போராட்டத்தில் தாய் வள்ளி முக்கிய பங்காற்றியது குறித்து ‘அம்மா’ஸ் ப்ரைடு’(Amma’s Pride) எனும் ஆவணத் திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷிவ க்ரிஷ், ஸ்ரீஜா-அருண் ஆகியோரின் இந்த வெற்றியில் ஸ்ரீஜாவின் தாய் வள்ளியின் முக்கிய பங்கு ஒளிந்திருப்பதை வெளிக்காட்ட விரும்பி இந்த ஆவணத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் திரையிடலுக்கு பின் அம்மா’ஸ் ப்ரைடு உலகெங்கிலும் நடைபெறும் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பிரத்யேக திரையிடல் நிகழ்வுகளிலும் திரையிடப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்திய பார்வையாளர்களுக்கும் திரையிடப்பட்டு வருகிறது. சர்வதேச திருநர் தினத்தையொட்டி முன்னதாகவே கடந்த மார்ச் 31ம் தேதியன்று பால்புதுமையின சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கான சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் இந்த ஆவணத் திரைப்படம் சிறப்பாக திரையிடப்பட்டது.
தன் பிள்ளை திருநர் சமூகத்தை சார்ந்த பாலினத்தவர் என்பது தெரிந்ததும், இயல்பை ஏற்றுக்கொள்ள மறுத்து உடனே பெற்ற பிள்ளையை வீட்டிலிருந்து வெளியேற்றும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு மத்தியில், தன் மகள் ஒரு திருநங்கை என்ற விஷயம் தெரிந்ததும் அவருக்கு ஆதரவாக நின்று மகளின் திருமணம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென போராடிய தாய் வள்ளி, “ஸ்ரீஜா… எனக்குக் கிடைத்த வரம்” என கொண்டாடி மகிழ்கிறார்.
திருநர் சமூகத்தை சார்ந்தவர்கள் அனைத்தையும் போராடிதான் பெற வேண்டியிருக்கிறது. பெற்றோரின் ஆதரவு, கல்வி, வேலை, திருமணம் என தனக்கான உரிமைகளை தாயின் ஆதரவுடன் பெற்றுக்கொண்டு வெற்றிகரமாக வாழும் ஸ்ரீஜா, வாழ்வில் நம்பிக்கையிழந்த ஒவ்வொரு திருநங்கை மற்றும் திருநர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் விடிவெள்ளியாக திகழ்கிறார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்