கொல்கத்தா: ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டியான துரந்த் கோப்பையின் 132 தொடர் அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் ஆக.3ம் தேதி முதல் நடந்து வந்தது. கொல்கத்தாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மோகன்பகான்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. கால்பந்து களத்தில் கடும் போட்டியாளர்களான இரு அணிகளும் மோதும் ஆட்டம் என்பதால் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இந்த அணிகள் இரண்டும் இதற்கு முன் தலா 16 முறை துரந்த் கோப்பையை வென்றுள்ளன. தொடர்ந்து 17வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இரு அணிகளும் முனைப்பு காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் சமபலத்தில் மல்லுக்கட்டியதால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.தொடர்ந்து 2வது பாதியிலும் அந்த பரபரப்பு குறையவில்லை. ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் மோகன்பகான் அணியின் அனிருத் தாபா முரட்டு ஆட்டம் ஆடியதால் ‘சிவப்பு அட்டை’ காட்டி வெளியேற்றப்பட்டார்.
அதனால் 10 பேருடன் விளையாட வேண்டிய சூழலில் சிக்கியது மோகன் பகான். ஆனாலும் அந்த அணியின் டிமி பெட்ராடோஸ் ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். அதே நிலைமை கடைசி வரை தொடர மோகன்பகான் 23 ஆண்டுகளுக்கு பிறகு 17வது முறையாக துரந்த் கோப்பையை வென்றது. தோல்வி காரணமாக ஈஸ்ட் பெங்கால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.