புவனேஷ்வர்: ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜ 78 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக தனிப்பெரும்பான்மையை பெற்றது. இதன் மூலமாக 24 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளத்திடம் இருந்த ஆட்சியை பாஜ கைப்பற்றியது. ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மஜ்ஹி பாஜ எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை முதல்வர்களாக பாஜ மூத்த தலைவர் கேவி திங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. ஜனதா மைதனாத்தில் நடந்த விழாவில் முதல்வர் மோகன் சரண் மஜ்ஹிக்கு ஆளுநர் ரகுபர்தாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதல்வர்கள் கேவி சிங் தியோ, பிரவதி பரிதா மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். விழாவில் பிரதமர் மோடி, பாஜ தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், புபேந்தர் யாதவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் பங்கேற்றனர்.